

பழநி: திண்டுக்கல் முதல் பழநி வரை சாலையோரம் உள்ள பாத யாத்திரை நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால் பக்தர்கள் நடக்க சிரமப்படுகின்றனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் தைப்பூச திருவிழா விசேஷமானது. இதற்காக லட்சக் கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, திரளாக பாதயாத்திரையாக சென்று முருகனை தரிசிப்பர். 2023 ஜன.29-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது.
இதையொட்டி முன்கூட்டியே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஏராளமானோர் பழநிக்கு தற்போதே பாதயாத்திரையாக வரத் தொடங்கி விட்டனர். இதற்காக திண்டுக்கல் முதல் பழநி வரை 56 கி.மீ. தொலைவுக்கு சாலையோரம் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட் டுள்ளது.
தற்போது திண்டுக்கல் முதல் சத்திரப்பட்டி வரை சாலை விரி வாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதில் பாதயாத்திரை பக்தர்களுக்கான நடைபாதை சில இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நடைபாதை இல்லாத இடங்களில் பக்தர்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் விபத்துகளும் நடக்க வாய்ப்புள்ளது. சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் பராமரிப்பில்லாத நடை பாதை நெடுகிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுவதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விழா நெருங்கும்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்குவர் என்பதால் தற்போதே நெடுஞ் சாலைத் துறையினர் நடைபாதையை சீரமைத்து, புதர்களை அப்புறப்படுத்த வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாத யாத்திரை பக்தர்கள் கூறுகையில், நடைபாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஆங்காங்கே சாலைப் பணிகள் நடந்து வருவதால், சிறிது தூரம் நடந்தாலே மூச்சுத் திணறுகிறது. பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், திண்டுக்கல் முதல் பழநி வரையுள்ள பாதயாத்திரை நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. நடைபாதை இல்லாத இடங்களில் பக்தர்கள் சாலையோரமாக நடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.