

விருத்தாசலம்: பெரியாக்குறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இணைந்து ரூ.1.17 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தணிக்கைத் துறை விசாரணை மேற்கொண்டது.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியாக்குறிச்சி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக கயல்விழி, துணைத் தலைவராக சவுந்திரபாண்டியன் உள்ளனர். இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டப் பயனாளிகளாக 2,500 பேருக்கு வருகைப் பதிவேடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு பணி வழங்கப்படாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புலம் பெயர் தொழிலாளர்கள் பெயரிலும், கல்லூரி பயிலும் மாணவர்கள் பெயரிலும் வருகைப் பதிவேட்டை பயன்படுத்தி, அதன்மூலம் ரூ.1.17 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், பணித்தள பொறுப்பளர்களான லாவண்யா, சிவானந்தம், ரேவதி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் மாற்றப்படாமல் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து பணி செய்வதாகவும், அவர்கள் மூலமாக முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் பயன்படுத்தியதாக கணக்கெழுதி அதன்மூலமும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியாக்குறிச்சி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், ஊராட்சிகள் உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்துள்ளனர்.
இப்புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அந்தப் புகார் மீது விசாரணை நடத்தி கடந்த 17-ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரனிடம் கேட்டபோது, “புகாரின் மீது தணிக்கைத் துறை விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஏற்கெனவே இதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பணித்தள பொறுப்பாளர்களை நீக்கவும் ஆட்சியருக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது” என்றார்.
இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் கயல்விழியிடம் கேட்டபோது, “நான் பெண் என்பதால் சில வார்டு உறுப்பினர்கள் காழ்ப்புணர்ச்சியின் பேரில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறுவதைப்போல் எந்த முறைகேடும் நடைபெறவில்லை” என்றார்.