

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் அவென்யூ பகுதியைச் சேர்ந்த விஜயன் - பிரியா தம்பதியரின் ஒரு வயது குழந்தை சாத்விக். குழந்தைக்கு கடந்த 13-ம் தேதிகாய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து குழந்தையை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெற்றோர் சேர்த்தனர். குழந்தைக்கு ஏற்கெனவே தண்டுவடமும் மூளையும் இணையும் இடத்தில் உள்ள மூளைத் தண்டில் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்தக் குழந்தைக்கு டெங்கு பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தைசாத்விக் நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் கூறும்போது: குழந்தை இறப்புக்கு முழுவதுமாக டெங்கு காய்ச்சலே காரணம் என்று கூற முடியாது.இறப்புக்கான முழு மருத்துவ அறிக்கையை கேட்டுள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் கொசுஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.