நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என ஆராய்ந்து செயல்படுவதே நல்ல அரசு - ஆர்பி உதயகுமார் கருத்து

நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என ஆராய்ந்து செயல்படுவதே நல்ல அரசு - ஆர்பி உதயகுமார் கருத்து

Published on

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சாஸ்தா கோயிலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடுமபத்துடன் வந்தார். கோயிலில் தனது மகள் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு நடத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, ‘‘தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. பால் விலை, மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கோரிக்கை வைத்தால், முதல்வர் ஏற்க மறுத்து வருகிறார். தமிழக அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக அதிமுக சார்பில் 4 முறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போது பேரூராட்சி, ஒன்றியம், நகரம், மாவட்டம் என்ற அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சாதாரண மக்களின் பிரதான உணவான பால் விலை உயர்வு என்பது பொருளாதார சுரண்டலாக உள்ளது. தமிழக அரசு அறிவித்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிப்பாகவே உள்ளது. அதற்கான அரசாணைகூட வெளியிடப்படவில்லை. திட்டங்கள் கடைகோடி மக்களை சென்றனடைகிறதா என ஆட்சியாளர்கள் ஆராய்ந்து செயல்படுவது தான் நல்லரசு ஆகும். நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது" என்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in