

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் வர்தா புயல் எந்தத் திசை நோக்கி நகரும் என்பது குறித்து வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துக் கூறியிருக்கும் தகவல் பின்வருமாறு..
வர்தா புயல் தீவிர புயலாக உருப்பெற்றுள்ளது. இது தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயலானது கரையைக் கடக்கும்போது வறண்ட காற்றின் காரணமாக வலுவிழந்த நிலையிலேயே இருக்கும். வர்தா புயலானது சென்னையைச் சுற்றியுள்ள புலிகாட் பகுதியில் கரையைக் கடக்கலாம் என சில முன்னணி வானிலை கணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.
ஆழ்ந்த முகடு ஒன்று தற்சமயம் வர்தா புயலுக்கு வலு சேர்த்து வருகிறது. புயல் வலுவிழக்கும் போது மிதமான காற்றழுத்த முகடு அதன் மீது ஆதிக்கம் செலுத்தும்.
வர்தா புயலால் டிசம்பர் 12-ம் தேதியன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்பது வர்தா புயலின் நன்மை தரும் தகவல்.
திருவள்ளூர், சென்னை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் கடுங்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர். வர்தாவால் சென்னைக்கு நல்ல மழை வாய்ப்பு இருக்கிறது.
உலகளவில் வானிலை முன்னறிவிப்பு கணித்துச் சொல்லும் பிரபல அமைப்புகளான ECMWF, GFS போன்றவை வர்தா சென்னை அருகே புலிகாட் பகுதியிலே கரையைக் கடக்கும் என்றே தெரிவிக்கின்றன. சென்னை மக்களின் அபிமானம் பெற்ற பிபிசி-யின் யுகேமெட் UKMET (BBC) வர்தா தென் சென்னை அருகே கரையைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.
வர்தா கரையைக் கடக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், மணிக்கு 50 முதல் 75 கி.மீ வரை குறைவாகவோ கூடுதலாகவோ காற்றின் வேகம் அமைந்தாலும் அதன் பாதையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.
ஆனால்... நமக்கு மழை தேவைப்படுகிறது. எனவே, வர்தா தென் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என நம்புவோம். உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை. வெள்ளம் வருமோ என்று அச்சப்பட அவசியமே இல்லை. அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்திருங்கள்...