

புதுச்சேரி: புதுச்சேரி சொசியெத்தே புரோகிரெசீஸ்த் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்றவர்களை பள்ளி சங்க தலைவர் வேதாந்தம் வரவேற்றார். நூற்றாண்டு சிறப்பு அறிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வாசித்தார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். மலரை முதல்வரிடமிருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘‘நூறாண்டு கண்ட சொசியெத்தே புரோகிரெசீஸ்த் பள்ளியில் பயின்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவது அவசியம்.
நடத்த முடியாமல், சிரமப்பட்டு நடத்தப்படும் சாதாரண பள்ளிகளுக்கு 95 சதவீத விழுக்காடு அரசு நிதியுதவி கொடுத்து வருகிறது. எத்தனையோ பெரிய பள்ளிகள் வந்திருந்தாலும், இப்பள்ளி அரசின் நிதியுதவியோடு எத்தனை சிறந்த கல்வியாளர்களை உருவாக்கியிருக்கின்றது என்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது.
இதனை இப்போது உள்ள மாணவர்கள் எண்ணிப்பார்த்து படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தான் படிப்பார்கள். அப்படிப்பட்ட பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சியை கொடுக்கின்றது பள்ளியாக இப்பள்ளி திகழ்வதற்கு எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்.
புதுச்சேரியை பொருத்தவரையில் அன்று இருந்த நிலை வேறு. இப்போது இருக்கின்ற நிலை வேறு. புதுச்சேரி மாநிலம் இந்தியாவிலேயே கல்வியில் இரண்டாமிடம் வகிக்கிறது. சிறிய மாநிலமாக இருந்தாலும், எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கி கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. புதுச்சேரியில் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்விக் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகவே அனைவருக்கும் கல்வி எளிதாகக் கிடைக்கும் நிலை உள்ளது. உயர் கல்வியை பயிலும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அரிதாக இருந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் புதுச்சேரியில் தற்போது அதிகமாக உள்ளனர். கல்வித்துறையில் ஆரம்ப காலத்தை ஒப்பிடுகையில் புதுச்சேரி மாறிவிட்டதை காணமுடிகிறது. அனைத்துத் துறையிலும் புதுச்சேரி மாநிலத்தவர் சிறந்தவர்களாக திகழும் வகையில் அரசு நிதியை அளிக்கும். கல்வித்துறைக்கு அதிக நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தற்போது 95 சதவீத நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதனை 100 சதவீதமாக அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும். நிச்சயம் 100 சதவீத நிதியுதவி வழங்கப்படும். மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் அப்பள்ளிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.