Last Updated : 13 Dec, 2022 06:01 PM

 

Published : 13 Dec 2022 06:01 PM
Last Updated : 13 Dec 2022 06:01 PM

திருநள்ளாறில் ஆன்மிகப் பூங்கா; மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி காணொலி மூலம் திறந்து வைப்பு: திருநள்ளாறு எம்.எல்.ஏ புறக்கணிப்பு

திருநள்ளாறு ஆன்மிகப் பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய பொது மக்கள்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைக்கப்பட்டு வரும் ஆன்மிகப் பூங்காவை, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி புதுச்சேரியிலிருந்து காணொலி மூலம் இன்று (டிச.13) திறந்து வைத்தார்.

யாருக்கும் அழைப்பு கொடுக்காமல் திடீரென அவசர கதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் திறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால் மாவட்டம், புதுச்சேரியின் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்கிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் திருநள்ளாறு ”கோயில் நகரமாக” அறிவிக்கப்பட்டு, ஹட்கோ நிதியுதவியுடன் கோயில் நகரத் திட்டத்தில் பல்வேறு பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இத்திட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில், திருநள்ளாறில் மத்திய அரசின் நிதியுதவியுடன், சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.7.77 கோடி செலவில், 21,897 ச.மீ பரப்பில் ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணிகள் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நவக்கிரக கோயில்களை பிரதிபலிக்கும் வகையில் கோபுரங்களுடன் கூடிய நவக்கிரக தல அமைப்பு, சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய பெரிய அளவிலான தியான மண்டபம், மூலிகைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திட்டமிடப்பட்டு ஆன்மிகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுற்றுலாத்துறை சார்பில், புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற, மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, காணொலி மூலம் திருநள்ளாறு ஆன்மிகப் பூங்காவையும் திறந்து வைத்தார். இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருநள்ளாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருநள்ளாறு ஆன்மிகப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபம்

பொதுமக்கள் போராட்டம்: விழா நடைபெற்றபோது அங்கு வந்த பொதுமக்கள் சிலர், பணிகள் முடிக்கப்படாமல் அவசரகதியில், எவ்வித அறிவிப்புமின்றி திடீரென காணொலி மூலம் திறக்கப்பட்டது குறித்தும், பொதுமக்கள் அழைக்கப்படாதது குறித்தும் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆன்மிகப் பூங்கா வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில அதிகாரிகள் மட்டுமே இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். மாநில அரசையும், காரைக்காலையும் புறக்கணிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தனர்.

இது குறித்து திருநள்ளாறு எம்.எல்.ஏ பி.ஆர்.சிவா இந்து தமிழிடம் கூறியது: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் காரைக்காலில் லேண்ட் மார்க்காக அமையக்கூடிய கனவுத் திட்டம் இது. இத்திட்டத்துக்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளேன். கடந்த ஆட்சியில் தொய்வாக நடைபெற்ற பணிகள், தற்போதையை ஆட்சியில் விரைவுப்படுத்தப்பட்டு 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நவக்கிரக தலங்களில் இன்னும் சாமி சிலைகள் வைக்கப்படவில்லை. தியான மண்டப பணிகள் முழுமையடையவில்லை.

திருநள்ளாறு ஆன்மிகப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நவக்கிரக தலங்கள்

பெரிய அளவிலான சிவன் சிலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை முழுமையாக முடித்து ஜனவரி மாதத்தில் மக்கள் முன்னிலையில் விமரிசையான வகையில் திறக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பணிகள் முழுமை பெறாமல், யாருக்கும் தெரிவிக்காமல் அவசர கதியில் திறக்க வேண்டிய அவசியம் ஏன்? நேற்று முன் தினம் ஆட்சியரால் எனக்கு வாட்ஸ்அப் மூலம் திடீரென அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆட்சியருக்கே வாட்ஸ்அப் மூலம்தான் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களை அழைக்காமல், தனிப்பட்ட முறையில் இவ்விழா நடத்தப்பட்டதால் நான் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் கூட ஆன்மிகப் பூங்கா திறப்பு என்று இல்லாமல் ஆன்மிகப் பூங்கா அபிவிருத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x