

ஈரோடு: தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ‘கருப்பன்’ யானை, விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளையும் சேதப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே இருவர் உயிரிழப்புக்கு காரணமான, ‘கருப்பன்’ யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனப்பகுதியைச் சுற்றியுள்ள தொட்டகாஜனூர், ஜீரஹள்ளி, திகினாரை, எரகனஹள்ளி, மரியாபுரம், கரளவாடி, மல்லன்குழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில், மக்காச்சோளம், சோளம், வாழை, தென்னை, பாக்கு போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, ‘கருப்பன்’ என பெயரிடப்பட்ட ஒற்றை ஆண் யானை, விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அதோடு, திகினாரை மற்றும் தொட்டகாஜனூர் பகுதிகளில் தோட்டங்களில் காவல் இருந்த இரு விவசாயிகளை, ‘கருப்பன்’ யானை மிதித்துக் கொன்றது.
கும்கி யானைகள் வரவழைப்பு: இதையடுத்து, ‘கருப்பன்’ யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை மாதம், ஆனைமலை யானைகள் நலவாழ்வு மையத்தில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராஜவர்தன் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு, ‘கருப்பன்’ யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்தது.
கும்கி யானைகள் துணையோடு, ஒற்றை யானை ‘கருப்பனை’, 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் விரட்டியுள்ளதாகவும், வனப்பகுதியில் இருந்து அந்த யானை வெளியே வராதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கும்கி யானைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
அச்சத்தில் விவசாயிகள்: இந்நிலையில், அடர்வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, ‘கருப்பன்’ யானை, கடந்த ஒரு மாதமாக மீண்டும் விளைநிலங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. யானைகளை விரட்டச் செல்பவர்களை ஆக்ரோஷத்தோடு துரத்துவதாலும், தோட்டத்தில் உள்ள கூரை வீடுகளைத் தாக்குவதாலும் இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து தாளவாடி, ஜீரஹள்ளி பகுதி விவசாயிகள் கூறியதாவது: இரவு 10 மணியளவில் தோட்டத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் ‘கருப்பன்’ யானை, அதிகாலை மீண்டும் வனத்திற்குள் சென்று விடுகிறது. யானையை விரட்ட வரும் வேட்டைத் தடுப்பு காவலர்கள், யானை மீது டார்ச் லைட் அடித்து விரட்ட முயற்சித்தால், ஆக்ரோஷமாகி அவர்களைத் தாக்க ஓடி வருகிறது. இதனால், அவர்களால் யானையை விரட்ட முடிவதில்லை.
உயிர்பலிக்கு வாய்ப்பு: விவசாயிகளாக ஒன்றிணைந்து, நான்கைந்து டிராக்டர்களை இயக்கி, ஒலி எழுப்பினால் மட்டும் சிறிது அச்சப்படுகிறது. இதுவரை பயிரை மட்டும் சேதப்படுத்திய ‘கருப்பன்’ யானை தற்போது, தோட்டத்தில் உள்ள குடியிருப்புகளையும் தாக்கத் தொடங்கி விட்டது. கடந்த ஒரு வாரமாக, மரியாபுரத்தில் அந்தோணி என்பவரது தோட்டத்தில் சுற்றிய யானை, அவரது குடியிருப்பை சேதப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இரு உயிர்களை பலிவாங்கிய, ‘கருப்பன்’ யானையால், பயிர்சேதம் மட்டுமின்றி உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சுகின்றோம். எனவே, வனத்துறையினர் மீண்டும் கும்கி யானைகளை வரவழைத்து, ‘கருப்பன்’ யானையை அடர்வனத்திற்குள் விரட்டவோ, வேறு வனப் பகுதிக்கு இடம் மாற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.