Last Updated : 03 Dec, 2022 04:03 AM

 

Published : 03 Dec 2022 04:03 AM
Last Updated : 03 Dec 2022 04:03 AM

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் 300 ஆண்டுகள் பழமையான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள ஏறுதழுவுதல் கல்வெட்டு.

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் 300 ஆண்டுகள் பழமை யான ஏறுதழுவுதல் குறித்த நடுகல் உள்ளது, என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினரும், பாறை ஓவிய ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ண குமாரின் வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து, அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் கோவிந்த ராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கால்நடை வளர்ப்பு, ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய வற்றைக் குறிக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களும், வரலாற்றுகால நடுகற்களும் ஏராளமாக கிடைத்துள்ளன.

இந்நிலையில்தான் அகரம் தென்னந்தோப்பில் ஏறு தழுவுதல் குறித்த நடுகல் கண்டறியப் பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில், காளையானது முன்னங்காலை தூக்கி ஓடுவது போல காட்டப்பட்டுள்ளது. அதற்குப் பின்னால் அக்காளையை அடக்க முற்படும் வீரன் காளையின் திமிலை இறுகப் பற்றிக்கொண்டு காளையின் முன்னங்காலில் தனது கால்களை பின்னிக்கொண்டு தொங்குகிறான். இதனால் காளையின் நாக்கு வாய்க்கு வெளியே தொங்குகிறது. ஏறு தழுவுதல் என்னும் சொல்லுக்கு ஏற்ப இந்த நடுகல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

3-வது நடுகல்: சேலம் அரசு அருங்காட்சிய கத்தில், ஆத்தூர் கருமந்துறை யிலிருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டு, வீரன் எருது விளையாடி பட்டான் எனக் குறிப்பிடுகிறது. 2-வது ஏறுதழுவுதல் குறித்த நடுகல் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா ஆதமங்கலம் புதூர் அருகே கிடைத்துள்ளது. தற்போது 3-வதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏறுதழுவும் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது, என்றார்.

வரலாற்றுச் சான்று: 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஏறு தழுவுதல் உள்ளிட்ட வீர விளையாட்டுப் போட்டிகள் நடந்ததாக பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏறு தழுவுதல் நிகழ்ச்சி நடந்ததற்கான நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் பாரம்பரிய மாக நடந்து வந்துள்ளதையே இக்கல்வெட்டுகள் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x