

கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஒரு மாதமாக தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவிகள், ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பர்கூர் அரசு மகளிரி மேல்நிலைப்பள்ளியில் பர்கூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் 1,051 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளி 2.15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழைநீர் தேங்கி குளம்போல மாறியுள்ளது. இதனால், வகுப்பறைகளுக்கு மாணவிகள், ஆசிரியர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளி தாழ்வான பகுதியில் இருப்பதால், மழைக் காலங்களில் மழை நீர் பள்ளி வளாகத்தில் தேங்கி விடுகிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. பேரூராட்சி நிர்வாகம் மூலம் 3 மின்மோட்டார் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றினர். தண்ணீர் வடிந்து வந்தநிலையில், மீண்டும் பெய்த மழையால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல மாறியுள்ளது.
தேங்கியுள்ள தண்ணீரை தற்போது ஒரு மின் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், சில இடங்களில் சிறு நீர் ஊற்றுகளும் உருவாகி உள்ளன. இதனால், தொடர்ந்து நீர் தேங்கிய நிலையில் உள்ளது. தேங்கிய நீரால் வகுப்பறை கட்டிடங்கள் உறுதித்தன்மையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பலநாட்களக நீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே, மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க சாலையின் உயரத்துக்கு பள்ளி வளாகத்தில் சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: பள்ளிக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால், பல்வேறு திட்டங்களின் கீழ் பள்ளி மேம்பாட்டுப் பணிகள் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கான அனுமதி, நிதி ஒதுக்கீடு பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. எனவே, பள்ளி அமைந்துள்ள இடத்துக்கு பட்டாவும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.