

புதுச்சேரி: புதுச்சேரி மக்களின் உணர்வோடு கலந்த, மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று காலை மரணம் அடைந்தது.
லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை என அனைத்து சந்திப்புகளிலும் பக்தர்கள் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யானை மீது இருந்த பூக்களை பிரசாதமாக கருதி பக்தர்கள் வழியெங்கும் பக்தியுடன் வாங்கினர். அதிகளவு மக்கள் வெள்ளத்தால் அடக்கம் செய்யும் இடத்துக்கு யானையின் உடல் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது.
கடலூர் சாலையில், அடக்கம் செய்யும் வனத்துறைக்கு பின்புறமுள்ள இடத்துக்கு யானை லட்சுமி உடல் மாலை நான்கரை மணியளவில் வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் உடன் வந்தனர். இறுதி யாத்திரையின்போது புதுவை நகரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் 9 பேரும், புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 9 பேரும் என 18 பேர் உடற்கூறு அறுவைக்கான சாதனங்களுடன் அடக்க இடத்திற்கு வந்தனர். அதைத்தொடர்ந்துயானை லட்சுமிக்கு இரண்டரை மணி நேரம் உடற்கூறு ஆய்வு நடந்தது. அப்போது அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டது. உடற்கூறு அறுவை சிகிச்சையை தனியாக அக்குழு வீடியோவில் பதிவு செய்து கொண்டது.
யானையின் தந்தங்கள் தனியே எடுக்கப்பட்டு, வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பின் அடக்கம் செய்யும் இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க குவிந்தனர். உப்பு, மஞ்சள் தூவி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
‘யானையல்ல என் தோழி' - ஆளுநர் தமிழிசை உருக்கம்: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமிக்கு அஞ்சலி செலுத்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "5 வயதில் இருந்து கடந்த 27 ஆண்டுகளாக, புதுச்சேரியில் நம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருந்த யானையும் தோழியுமான லட்சுமி தற்போது இல்லை. எவ்வித வதையும் இல்லாமல் இறைவனே, இறைவனிடம் சென்றுள்ளார். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. மீண்டும் கோயில் நிர்வாகமும் அரசும் முடிவு செய்து, அவளின் வழித்தோன்றலாக இன்னொரு யானைக்கு ஏற்பாடு செய்வார்கள்” என்றார்.
இதனிடையே, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் யானை லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நாராயணசாமி கூறுகையில், " யானை லட்சுமி முறையாக பராமரிக்கப்பட்டது. இருப்பினும் பீட்டா அமைப்பினர் யானையை காட்டில் விட வேண்டும் என்றுகூறினர். இதையடுத்து கடந்தகாங்கிரஸ் ஆட்சியில், நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்து, யானையை கோயிலில் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தோம். அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிக்கின்ற யானை இப்போது நம்மிடம் இல்லாது பெரிய அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக் கணக்கில் மக்கள் இங்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.அந்த அளவிற்கு மக்கள் லட்சுமி யானையை நேசித்துள்ளனர். இதுபுதுவைக்கு மிகப்பெரிய இழப்பு. யானை இறந்தது குறித்து விசா ரணை நடத்தப்பட வேண்டும். விசாரணயில் யார் தவறு செய்தார்கள் என தெரியவரும்" என்றார்.
வனத்துறை மீது புகார்: புதுச்சேரி மக்கள் நல்வாழ்வு நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், பெரியக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "கடந்த சில நாட்களாக யானையின் உடல்நிலையில் பாதிப்பு இருந்தது. யானைக்குமருத்துவம் பார்க்க போதிய மருத்துவர்கள் புதுச்சேரியில் இல்லை. அதனால் யானைக்கான மருத்துவ சிகிச்சை விவரத்தையும், யானை இறந்தது பற்றியும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். முறையாக யானையை பராமரிக் காத வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.