போச்சம்பள்ளி பகுதி விவசாயிகளுக்கு ‘இனிக்கும்’ இடைப்பருவ மாங்காய் மகசூல்: ஒரு டன் ரூ.70,000-க்கு கொள்முதல்

போச்சம்பள்ளி பகுதி விவசாயிகளுக்கு ‘இனிக்கும்’ இடைப்பருவ மாங்காய் மகசூல்: ஒரு டன் ரூ.70,000-க்கு கொள்முதல்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: சீசன் காலத்தை விட இடைப்பருவ மாங்காய்க்கு கூடுதல் விலை கிடைப்பதால், போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா தோட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாயிகள் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, மருந்துகள் தெளித்து சீர் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

வருவாய் இழப்பு: மார்கழி, தை மாதத்தில் பூக்கள் பூக்கும். அதனை தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மா சீசன் தொடங்கும். ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் நிறைவடையும். கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் பல்வேறு காரணங்களால் தொடர் வருவாய் இழப்பினை சந்தித்து வருகின்றனர்.

இதனால், மா விவசாயிகள் பலர் இடைப்பருவ மா மகசூல் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, இடைப்பருவத்தில் நல்ல வருவாய் கிடைப்பதால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இடைப்பருவத்தில் ஆர்வம்: இது தொடர்பாக கேஆர்பி இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மா விவசாயிகள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். நிகழாண்டிலும் மாவிளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும், மா டன்னுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை விலை கிடைத்தது. அதேநேரம், வெளிமாநில மாங்காய் டன்னுக்கு ரூ.75 ஆயிரம் வரை விலை போனது.

இந்நிலையில், போச்சம்பள்ளி, சந்தூர், வீரமலை, தாதம்பட்டி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதி விவசாயிகள் இடைப்பருவ மா மகசூலில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பராமரிப்பு முறை: இதற்காக மா மரங்களில் பூக்களை வளர விடாமல் தடுத்து செப்டம்பர் மாதம் முதல் பூக்கள் வளர ஏதுவாக மரங்கள் பராமரிக்கப்படும்.இதையடுத்து, சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தேவையான உரங்கள் அளித்து மா மகசூல் பெறப்படுகிறது. இதற்காக ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வரை செலவாகிறது. பெங்களூரா, நீலம் மற்றும் செந்தூரா உள்ளிட்ட ரக மாங்காய்கள் மட்டுமே இடைப்பருவ மா உற்பத்தியில் மகசூல் கிடைக்கிறது.

நேரடி விற்பனை: இடைப்பருவ மாங்காய்கள் தற்போது டன்னுக்கு ரூ.70 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது. சீசன் நேரத்தில் அறுவடை செய்யப்படும் மாங்காய்களை சந்தைக்கும், மாங்கூழ் அரவைக்கு நாம் எடுத்து செல்ல வேண்டும். தற்போது, வியாபாரிகளே நேரடியாக தோட்டத்துக்கு வந்து கொள்முதல் செய்து, உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதன் காரணமாகவே, இடைப்பருவ மாங்காய் சாகுபடி பரப்பளவு அதிகரித்து உள்ளது. வழக்கமாக 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இடைப்பருவ மா சாகுபடி இந்தாண்டு 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் அதிகரித் துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in