நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டம்

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டம்
Updated on
2 min read

சென்னை: விவசாயிகள் போராட்டம் இனிநாடு முழுவதும் நடத்தப்படும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினர், காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு, தற்சார்பு விவசாயிகள் அமைப்பு, மக்கள் அதிகாரம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் உட்பட பல்வேறு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து கடந்த 26-ம் தேதி சென்னை ஆளுநர்மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர்.

அதற்கு அனுமதி இல்லாததால், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை பேரணி நடந்தது. இப்பேரணிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

மனுவை வாங்க மறுப்பு: பேரணி முடிந்த பிறகு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மூலம் அனுப்புவதற்காக, ஆளுநரிடம் மனு கொடுக்க சங்க நிர்வாகிகள் சென்றனர். ஆனால், அதற்கு ஆளுநர் மாளிகை மறுத்ததால், கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தமிழக பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதனிடம் அவர்களது கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநிலஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய, விரிவான பயிர் காப்பீடு வழங்கவேண்டும். டெல்லி போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட போலி வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுஉட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பேரணி நடத்தப்பட்டது. விவசாயிகளை சந்திக்க மறுத்த ஆளுநரின் போக்கை ஐக்கிய விவசாயிகள் முன்னணி கண்டிக்கிறது.

அடுத்த கட்ட போராட்டம்: நாட்டின் பல இடங்களில் ஆளுநர் மாளிகை நோக்கி கடந்த26-ம் தேதி பேரணிகள் நடத்தப்பட்டன. இது, விவசாயிகளின் அடுத்தகட்ட போராட்டத்தை குறிக்கிறது. தொடர்ந்து, நாடு முழுவதும் இதுபோன்ற போராட்டங்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு முன்னெடுக்க உள்ளது. இனி விவசாயிகள் போராட்டம் என்பது டெல்லியை மட்டுமே மையப்படுத்திய போராட்டமாக இல்லாமல் நாடு முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in