

மதுரையில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், பேருந்துகளில் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நாணயங்கள் செல்லும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து கடந்த 8-ம் தேதி நள்ளிரவு உத்தரவிட்டது. பழைய நோட்டுகளை வங்கிகளில் டிச.30 வரை டெபாசிட் செய்ய கால அவகாசம் வழங்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு புதிய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. தற்போது, புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஓரளவு புழக்கத்திற்கு வந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் போதிய 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வராததால் பொது மக்கள் தொடர்ந்து சிரமப்படு கின்றனர். இந்நிலையில், மதுரை யில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வியாபாரிகளும், பேருந்துகளிலும் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் 10 ரூபாய் நாணயத்தின் நடுவில் ரூ.10 என எழுத்துடன் பக்கவாட்டில் 11 கோடுகள் இடம் பெற்றிருக்கும் நாணயங்களை வாங்குகின்ற னர்.
நடுவில் ரூ. என்கிற எழுத்து இன்றி 10 மட்டும் இருந்து, 15 கோடுகள் இடம் பெற்றிருக்கும் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர்.
மதுரை அருகே சில நகர பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து சில பயணிகளை இடையில் இறக்கிவிட்டுள்ளனர்.
சிறுக, சிறுக வீடுகளில் டப்பாக்களில் சேமித்து வைத்தி ருந்த நாணயங்களுக்கும் சிக்கல் வந்துவிட்டதாக பொது மக்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது கூறியது:
ரூ.500, 1000 நோட்டுகள் தவிர, பிற ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு மதிப்பு நீக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. சிலர் தேவையின்றி கிளப்பிவிட்ட தகவலால் வாங்க மறுப்பதாகத் தெரிகிறது.
வர்த்தக நிறுவனங்கள், பேருந்துகளில் ரூ.10 நாணயத்துக்கு தடை ஏதுமில்லை. அரசு வெளியிட்ட அனைத்து வகை 10 ரூபாய் நாணயங்களும் செல்லும். தாராளமாக வாங்கலாம். வீணாக வதந்தியை பரப்ப வேண் டாம் என்றார்.