தூக்கி எறியப்படும் பேனாக்கள் நம் உறவுகளை பிரதிபலிக்கின்றன

தூக்கி எறியப்படும் பேனாக்கள் நம் உறவுகளை பிரதிபலிக்கின்றன
Updated on
2 min read

கோவையில் நிழலி காட்சிக்களம் அமைப்பு சார்பில், பேனாக்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘பேனா பேசுகிறது’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

வடகோவையில் உள்ள சப்னா புத்தக நிறுவன அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பால்பாயின்ட் பேனாக்களால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் குறித்து போ.மணிவண்ணன் இயக்கிய ‘முனை’, ‘புனிதா’ ஆகிய 2 குறும் படங்கள் திரையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, தாவர விதைகளை உள்ளடக்கிய முளைக்கும் பென்சில்களாக பார்ம்சில் குறித்தும், விடியல் அமைப்பு நடத்தும் குழந்தைகள் பாராளுமன்றம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சிறப்பு விருந்தினர் கவிஞர் புவியரசு பேசியதாவது: தூக்கி எறியப்படும் பால்பாயின்ட் பேனாக்கள் வெறுமனே சூழலை மட்டும் பாதிப்பதில்லை. பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியப்படும் பேனாக்கள் நம் மனநிலையை மாற்றுகின்றன என்பதே உண்மை. பால் பாயின்ட் பேனாக்களின் தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். விண்வெளியில் குளிரில் மை உறைந்து போகாமல் இருப்பதற்காக பால் பாயின்ட் பேனா கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

பின்னர் எப்படி பூமிக்கு வந்தது என்றால், ஒரு தத்துவம் நமக்கு தெரியாமலே நம்மை மூளைச்சலவை செய்வதற்கு இந்த பேனாவே உதாரணம். இந்த பேனாவின் தத்துவம் நம்முடைய குடும்பத்திலும் ஊடுருவி உள்ளது. பயன்படுத்தப்பட்ட பிறகு பேனாவைத் தூக்கி எறிவது போல, உறவுகளையும் தூக்கி எறிய வேண்டுமென்பதே அந்த தத்துவம். தூக்கி எறியப்படும் பேனாக்கள், நம் உறவுகளை பிரதிபலிக்கின்றன.

இந்த பழக்கம் நம்மை காலி இடத்தில் கொண்டு வந்து நிறுத்தும். ஆபத்தைத் தரும். செல்போனுக்குள் சுருங்கிக் கொண்டே வரும் எதிர்கால சந்ததியினருக்கு பேனா பிடித்து எழுதக் கூட விரல்கள் வராது. அதேபோல, குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியோடு நின்றுவிடாது அனைத்து மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் தான் உலகமே உள்ளது என்ற மாயை நம்மிடம் இருந்து அகல வேண்டும் என்றார்.

சூழலியல் ஆர்வலர் சதாசிவம் பேசியதாவது: பிளாஸ்டிக்குக்கு நிகராக பூமிக் குப்பையில் பால்பாயின்ட் பேனாக்களும் தூக்கி எறியப்படுகின்றன என்பதைக் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. பிளாஸ்டிக் வேண்டாம் என பேசுகிறோம். ஆனால் மிகப்பெரிய பிளாஸ்டிக் குப்பையை இந்த பேனாக்கள் உருவாக்குகின்றன என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை.

உபயோகி, தூக்கி எறி என்ற நோக்கத்திலேயே பால்பாயின்ட் பேனாக்கள் உருவாகின்றன. சூழலுக்காக போராடியவர்களிலும், சூழலை மாற்றப் போராடியவர்களிலும் பெண்கள் அதிகம். கேரளாவில் லட்சுமி மேனன் என்ற பெண் பால்பாயின்ட் பேனாக்களுக்கு மாற்று பேனா கண்டறிந்தார். வீணான காகிதக்குப்பைகளை எடுத்து அதன் மூலம் பேனாவை உருவாக்கினார். வேறு வழியில்லாமல் ரீபிளை அதில் பொருத்தினார். இருந்தும் அதன் பின் பக்கம், அகஸ்தியா என்ற செடியின் விதையை வைத்தார். பேனாவின் பயன்பாடு முடிந்ததும், அது வெறுமனே தூக்கி எறியப்படுவதில்லை; ஒரு விதையை விதைக்கிறது என்றார்.

கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் மை நிரப்பும் பேனாக்கள், மை பாட்டில்கள், பென்சில்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து விடியல் மு.பிரபாகரன் குழுவினர் நடத்திய பறை இசை, தப்பாட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in