

உள்படம்: சந்தோஷ்சாமி
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8-வது நபர் சந்தோஷ்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்தார்.
2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சயான் மற்றொரு வாகன விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பினார்.ஆனால், அவரின் மனைவியும், பெண் குழந்தையும் உயிரிழந்தனர். கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கின் விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சந்தோஷ்சாமி (52) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த இரு வாரங்களாக அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சந்தோஷ்சாமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் சிவகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து முறையாக விசாரித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுச் சென்று, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பட்டியலை மாற்ற இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.