Last Updated : 15 Nov, 2022 08:18 PM

8  

Published : 15 Nov 2022 08:18 PM
Last Updated : 15 Nov 2022 08:18 PM

புதுச்சேரியில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரிகள் உயர்த்தப்படும்: தமிழிசை தகவல்

நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன்.

புதுச்சேரி: புதுச்சேரியில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரிகள் உயர்த்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையை கடந்த வாரம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக இன்று ஆளுநர் தலைமையில் நிர்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குநர் டாக்டர். ஸ்ரீராமுலு, மருத்துவர்கள், தலைமை செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: ''தயாராக உள்ள அறுவை சிகிச்சை அரங்குங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவர்களை கூடுதலாக பணியமர்த்துவதற்காக விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தி அறிவிப்பு செய்ய இருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயலாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை சந்தித்து ஒரு மணி நேரம் புதுச்சேரியில் உள்ள மருத்துவத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தேன். அவர் நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார். புதுச்சேரியில் போதைப்பொருள் தடுப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்துவது, புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை மேம்படுத்துவது எல்லாம் நல்ல திட்டங்கள். மத்திய அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

உள்துறை அமைச்சர் சொன்னதுபோல தொழிற்கல்வி என்பது தாய்மொழியில் இருந்தால் அது மிகுந்த பலனைத் தரும். அதற்காக புதுச்சேரியில் மருத்துவக் கல்வியை தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சியை ஏற்கெனவே தொடங்கியிருக்கிறோம். முதலில் செவிலியருக்கான புத்தகங்களை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. மருத்துவப் புத்தகங்களை தமிழில் கொண்டுவந்து மருத்துவக் கல்வியை தமிழில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசத்து இருக்கிறேன். அவரும் அதை செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். அதனால் புதுச்சேரி தாய்மொழிக் கல்வியில் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

தொழில்நுட்ப மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்பது கண்கூடு. அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி இப்போது விளம்பரம் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக சரி செய்யப்படும். இப்போது 350 கருவிகள் வாங்குவதற்கான உத்தரவு தரப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனை என்றாலே துணிச்சலாக மக்கள் உள்ளே வந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவு. அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

வருமானத்தை உயர்த்த மத்திய அரசிடமிருந்து கோரிக்கை வந்திருக்கிறது. மத்திய அரசு முழுமையாக நிதியை தந்து கொண்டிருக்க முடியாது. மாநில அரசின் பங்கும் இருக்கிறது. மாநிலத்தின் வருமானத்தை உயர்த்த வேண்டும். இதுபற்றி முதல்வரும் சொல்லி இருக்கிறார்.

வெகு நாட்களாக வருமான வரி உயர்த்தப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி மாநிலத்தின் வருமானம் உயர்த்தப்படும். மத்திய அரசு தற்போது ரூ.1,400 கோடி வழங்கியிருக்கிறது. மாநிலத்தின் வருவாயின் ஒரு பகுதி வரி. மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் வரி உயர்த்தப்படும். அது மக்களுக்காகவே மக்களுக்கான திட்டங்களுக்காகவே இது செயல்படுத்தப்படுகிறது. புதுச்சேரியில் சென்டாக் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 50 சதவீத இடங்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

கட்டணத்தை உயர்த்திக் கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அரசு தரப்பில் கட்டணத்தை உயர்த்த முடியாது. வேண்டிய இடங்களை தர வேண்டும் என்று தெளிவாக கேட்டிருக்கிறோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு தொடர்பாக கலந்தாலோசனை செய்ய மத்தியக் குழு வருகிறது. அரசு நிர்வாகமும் மத்திய அரசு அதிகாரிகளும் இணைந்து எந்தெந்த துறைகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நிர்வாக ரீதியாக முடிவு செய்யப்படும்.

புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கத்துக்காக 300 ஏக்கர் நிலம் தேவையாக இருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் தென்னக மாநில கூட்டுக் கூட்டத்திலும் கோரிக்கை வைத்தேன். விமான நிலைய விரிவாக்கம் புதுச்சேரிக்கு மட்டுமே பலன் தருவதாக இருக்காது. தமிழகத்துக்கும் சேர்த்தே பலன் தரும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x