Published : 15 Nov 2022 03:51 PM
Last Updated : 15 Nov 2022 03:51 PM

பிரியா மரணம் | “அரசியல் நோக்கத்தோடு கிளறி விடுவது சரியல்ல” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாணவி பிரியா மரணம் தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: "மாணவி பிரியா மரணம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு எதையாவது கிளறி விடுவது சரியாக இருக்காது" என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழக அரசின் சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.15) தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாணவி பிரியா மரணம் அடைந்தது மிக மிக துயரமான சம்பவம். இதை அரசியல் ஆக்கக் கூடாது.

மாணவி பிரியாவுக்கு ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்பு காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 2 வாரத்திற்கு முன்பு அதேபோன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 7-ம் தேதி பெரியார் நகரில் புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று வரை அந்தக் குழந்தை நன்றாகத்தான் பேசிக் கொண்டு இருந்தாக அவரது பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

குழந்தையின் இறப்பை யாரும் அரசியலாக பார்க்கக் கூடாது. தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியான விஷயம் அல்ல. அரசியல் நோக்கத்தோடு எதையாவது கிளறி விடுவது என்பது அரசியல் தலைவர்களுக்கு சரியாக இருக்காது என்று நான் கருதுகிறேன்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உயிரிழந்த மாணவி பிரியாவின் உடலை வாங்க மறுத்து, மாணவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், காவல்துறை பேச்சுவார்த்தையின் முடிவில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் விவரம்: மாணவி பிரியா மரணம்: உறவினர்கள் போராட்டம்; காவல்துறை பேச்சுவார்த்தைக்குப் பின்னர் உடல் ஒப்படைப்பு

இதனிடையே, கால்பந்து வீராங்கனை - மாணவி பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் விவரம்: கால்பந்து வீராங்கனை பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - மருத்துவர்கள் விளக்கம்

முன்னதாக, மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணம் அடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 2 மருத்துவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கவல்துறை நடவடிக்கைக்கு புகார் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதன் விவரம்: 'மருத்துவர்களின் கவனக்குறைவு; மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பிரியாவின் தந்தை உருக்கம்: “சின்ன அறுவை சிகிச்சை என்பதால்தான், பெரியார் நகர் மருத்துவமனைக்கு முதலில் சென்றோம். அப்போது என் மகள் நடந்துதான் வந்தாள், இப்போது எனது பிள்ளையே போய்விட்டது சார்” என்று பிரியாவின் தந்தை உருக்கமாக கூறினார். வாசிக்க > 'நடந்துவந்த மகள்... இப்போது உயிரோடு இல்லை' - வீராங்கனை பிரியாவின் தந்தை உருக்கம்

அதிமுக சரமாரி குற்றச்சாட்டு: “மாணவி பிரியாவை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஏன் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை? யார் அனுமதி மறுத்தது? அதற்கு யார் காரணம்? மாணவியை அங்கிருந்து திருப்பி அனுப்பியது யார்? எனவே இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். முழு விவரம்: பிரியா மரணம் | “மருத்துவத் துறை சீரழிந்துள்ளதற்கு உதாரணம்... விசாரணை ஆணையம் அமைப்பீர்” - ஜெயக்குமார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x