சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 பேர் தங்கியுள்ள திருச்சி சிறப்பு முகாமுக்கு பலத்த பாதுகாப்பு

திருச்சி மத்திய சிறை வளாகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி மத்திய சிறை வளாகம் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.படம்: ஜி.ஞானவேல்முருகன்
Updated on
1 min read

திருச்சி: வேலூர், புழல் சிறைகளில் இருந்து விடுதலையான சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள திருச்சி சிறப்பு முகாமுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்ற உத்தரவால் அண்மையில் வேலூர், புழல் சிறைகளிலிருந்து விடுதலையான சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் அந்த நாட்டுக்கு திரும்பும்வரை தற்காலிகமாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் தங்கவைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் சிறையிலிருந்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் புழல் சிறையிலிருந்தும் பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 பேர் குறித்த விவரங்களை தனித்துணை ஆட்சியர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் ஆவணங்களில் பதிவு செய்தனர்.

பின்னர், அவர்களை முகாமிலுள்ள இதர வெளிநாட்டினருடன் தங்க வைக்காமல், முன்பகுதியிலுள்ள காவலர்கள் தங்குவதற்காக உள்ள 2 அறைகளில் ஒரு அறைக்கு 2 பேர் வீதம் தங்கவைத்தனர். இதற்கு 4 பேரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களை முகாமின் உள்பகுதியில் தனித்தனி அறைகளில் பிற வெளிநாட்டினருடன் தங்கவைக்க வேண்டும். வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டும் எனக் கூறினர்.

அப்போது, பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மாற்று ஏற்பாடு செய்வதாகவும் போலீஸார், வருவாய்த் துறையினர் கூறியதை, 4 பேரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 4 பேருக்கும் புதிதாக படுக்கை, போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. வெளியிலிருந்து உணவு வாங்கி வந்து வழங்கப்பட்டது.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு முகாம் மட்டுமின்றி, சிறை வளாகம் முழுவதும் மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in