Published : 12 Nov 2022 06:15 AM
Last Updated : 12 Nov 2022 06:15 AM
கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழில் நிறுவனங்கள் அமையவும், வேலைவாய்ப்பு பெருகவும் பேரூராட்சிகளை உருவாக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிக கிராமங்களைக் கொண்ட தமிழகத்தின்2-வது பெரிய தொகுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதி உள்ளது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் 61 கிராம ஊராட்சிகள், 173 குக்கிராமங்களுடன் தமிழகத்தின் 2-வது பெரிய ஊராட்சி ஒன்றியமாக உள்ளது. இந்த தொகுதியில் ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கருங்குளம், தூத்துக்குடி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சில பகுதிகளும் உள்ளன. தமிழகத்தின் 2-வது பெரிய தொகுதியாக இருந்தாலும், பேரூராட்சிகளே இல்லாத தொகுதியாகவே இருந்து வருகிறது.
பெரிய ஊராட்சி ஒன்றியம் என்றாலும், பெயர் சொல்லும் அளவுக்கு தொழிற்சாலைகள் இல்லை. போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் பெரிய நிறுவனங்கள் இப்பகுதியில் தொழில் தொடங்க முன்வருவது கிடையாது. இதன் காரணமாக விவசாயம் இல்லாத காலங்களில் இங்குள்ள மக்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினக்கூலியாக சென்று வருகின்றனர். ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், சில்லாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி அதிகமாக உள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதி சந்தைகளுக்கும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வாசனை திரவியங்கள்தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இப்பகுதியிலேயே வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் அமைத்தால், வேலைவாய்ப்பு பெருகும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே, சட்டப்பேரவையில் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, ‘ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூர், தருவைகுளம், புதுக்கோட்டை, வல்லநாடு, மாப்பிள்ளையூரணி ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். எனவே, இத்தொகுதி மக்களின் வேலைவாய்ப்பு, வருவாய் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு புதியம்புத்தூர் உள்ளிட்ட சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் த.சண்முகராஜ் கூறும்போது, ‘புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என ஏற்கெனவே ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊராட்சிகளாக இருப்பதால் ஊரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. புதியம்புத்தூர் ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழகத்தில் 2-ம் இடம் வகிக்கிறது. இந்த ஊராட்சி பேரூ ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அரசின் நிதி கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும்’ என்றார் அவர். அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஓட்டப்பிடாரம் தொகுதியில் பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக கோரிக்கைகளை எதுவும் கிடைக்கவில்லை. பேரூராட்சிகள் அமைப்பதில் விதிமுறைகள் உள்ளன. வளர்ச்சி பெற்ற, பெறக்கூடிய இடங்களை கண்டறிந்து அதற்கு அரசு ஒப்புதல் அளித்த பின்னரே அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள முடியும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT