

நாமக்கல்: பால் கொள்முதல் விலை உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் கே.முகமதுஅலி, பொதுச் செயலாளர் பி. பெருமாள் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த கடந்த 2 ஆண்டுகளாக போராடிவருகிறோம். இதர சங்கங்களும் இதே கோரிக்கையை முன் வைத்தது.
தற்போது, ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைத் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் ரூ.3 மட்டும் உயர்த்தியிருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. எனவே, கொள் முதல் விலை உயர்வை அரசுமறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆரம்ப சங்கங்களின் செயல்பாடுகளுக்கு தற்போது உள்ள லிட்டருக்கு ரூ.1.25 என்பதில் 50 காசுகள் உயர்த்த வேண்டும். 10,000 ஆரம்ப சங்கங்களின் பணியாளர்கள் 25,000 பேரின் சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஏற்கெனவே, ஆவின் பால் விற்பனை விலையில் ரூ.3 குறைக்கப்பட்டதால், ஆவினுக்கு ஓராண்டுக்கு ரூ.300 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது கொள்முதல் விலை ரூ. 3 உயர்வால் சுமார் ரூ.400 கோடி கூடுதல் செலவு ஆவினுக்கு ஏற்படும். இதற்கு அரசின் மானிய அறிவிப்பு இல்லை.
தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு ரூ.5-ல் இருந்து ரூ.10 வரைகொடுப்பதால் மொத்தம் இருந்த சுமார் 12,000 ஆரம்ப சங்கங்களில் தற்போது 8,000 சங்கங்கள்தான் ஆவினுக்கு பால் வழங்குகின்றன. பல சங்கங்கள் மூடப்பட்டு வருகின்றன. எனவே, பால் கொள்முதல் விலை உயர்வுடன் இதர கோரிக்கைகள் குறித்து தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை அரசு அழைத்துப் பேசி சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக அனைத்துபால் உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள்,ஆரம்ப சங்க பணியாளர் சங்கங்கள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை கூட்டாக தொடரவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.