கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு: வயலில் நெல்மணிகள் உதிர்வதால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள வயல்களில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு, நெல்மணிகள் பிரித்து எடுக்கப்பட்ட வைக்கோல் தொடர் மழையால் உலர வைக்க முடியாமல் வயல்களில் வீணாகி வருகிறது.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள வயல்களில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு, நெல்மணிகள் பிரித்து எடுக்கப்பட்ட வைக்கோல் தொடர் மழையால் உலர வைக்க முடியாமல் வயல்களில் வீணாகி வருகிறது.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: தொடர்ந்து பெய்து வரும் பரவலான மழையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. முற்றிய நெல்மணிகள் வயலில் உதிர்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பாசனம் மூலம் நேரடியாக 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல்சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

50,000 ஏக்கர்: இதில், கிருஷ்ணகிரி அணையின் கீழ் 9,012 ஏக்கர் விளைநிலங்களில் முதல்போக சாகுபடி கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் தொடர் மழையால், நிகழாண்டில் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

முதல்போக சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், வைக்கோல் உலர வைக்க போதிய இடமின்றி வயல்களில் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

முற்றிய நெல்மணிகள்: இதுதொடர்பாக கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள தின்னக்கழனி, கங்கலேரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

நடப்பாண்டில் தொடர்ந்து பெய்த மழையால், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் குறைவில்லாமல் வருகிறது. இதேபோல் ஏரி, குளம், குட்டைகள், பாசன கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் தேவைக்கு ஏற்ப உள்ளது. இதனால், விவசாயிகள் பலர் நெல் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டனர். தற்போது, நெல்மணிகள் முற்றிய நிலையில் அறுவடை பணியை தொடங்கி உள்ளோம். கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் மழையால் நெல் அறுவடை பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நெல்மணிகள் வயலில் உதிர்ந்து வருகிறது.

ஆட்கள் பற்றாக்குறை: ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், இயந்திரங்கள் உதவியுடன் அறுவடை செய்கிறோம். மழையால் நிலத்தில் இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்ய முடியவில்லை. இதேபோல, வெயில் இல்லாததாலும், சாரல் மழையாலும் வைக்கோலை உலர வைக்க முடியவில்லை. வயலில் உள்ள வைக்கோல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. நடப்பாண்டில் நல்ல மகசூல் இருந்தும், தொடர் மழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in