

புதுச்சேரி: சாலை விபத்தில் தலையில் காயம் அடைந்த இளைஞருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பிற்பகல் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் காணப்பட்டார். அவருக்கு உடனே ஆளுநர் முதலுதவி அளித்து, காயங்களுக்கு கட்டுபோட்டார்.
தொடர்ந்து ஆம்புலன்ஸில் ஏற்றி அந்த இளைஞரை செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
இது தொடர்பான வீடியோவை வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ள ஆளுநர், "விபத்துக்குள்ளான இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன்.
விபத்துக்குள்ளான இளைஞருக்கு ரத்த கசிவு நிறுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதிவேகத்தில் செல்வது, தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.