

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எம்எல்ஏவாக இன்று சட்டப்பேரவை வளாகத்தில் பொறுப்பேற்றார்.
புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அப்போது தேர்தலில் போட்டியிடாத நிலையில், எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார்.
எம்எல்ஏ இல்லாத ஒருவர் முதல்வர் பதவியில் நீடிக்க 6 மாத காலத்துக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும். அதனால் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டார். அதில் 18,709 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகரைவிட 11,144 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.
இதனை அடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதற்காக வளாகத்தினுள் விழா மேடை அமைக்கப்பட்டது. விழாவுக்கு காலை 11.10 மணியளவில் முதல்வர் நாராயணசாமி வந்தார். அவருக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது முதல்வர் நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர் கடமையை நேர்மையாக செய்வேன் என கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என தெரிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இதனை அடுத்து முதல்வர் நாராயணசாமிக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதுபோல் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், தீப்பாய்ந்தான், தனவேல், விஜயவேணி, எம்.என்.ஆர். பாலன், திமுக மாநில அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, சிவக்குமார் உட்பட பலரும் முதல்வர் நாராயணசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.