

ராமநாதபுரம்: மேலப்பார்த்திபனூர் கண்மாய் நிரம்பி 2 கிராமங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலக்காவனூர் அருகே பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பார்த்திபனூர் கண்மாய் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. உபரி நீரும், நேற்று முன்தினம் இரவு பெய்த மழை நீரும் சேர்ந்து, கீழப்பார்த்திபனூர் ஊராட்சி வடக்கூர் கிராம காலனி, இடையர் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்துள்ளது.
பார்த்திபனூருக்கு வடக்கில் உள்ள விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த நீரை மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலைக்கு வடக்கே வெளியேற்றுவதற்காக ஜேசிபி மூலம் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே, தண்ணீர் சூழ்ந்த வீடுகளையும், வயல்வெளிகளையும் பரமக்குடி எம்எல்ஏ செ.முருகேசன் பார்வையிட்டார். பரமக்குடி வட்டாட்சியர் தமீம் ராஜா உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு: பரமக்குடியில் இருந்து எஸ்.காவனுர், மருந்தூர், என்.பெத்தனேந்தல், வெங்கிட்டன்குறிச்சிசெல்லும் சாலையில் மேலக்காவனூர் அருகே சாலையில் 5 அடி ஆழத்தில் 7 அடி அகலத்தில் சிறிய பாலம் உடைந்து சேதமடைந்தது. இதனால் இப்பகுதிக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலத்தை சீரமைக்கக் கோரி சாலை மறியல் செய்ய வந்த கிராம மக்களிடம் பரமக்குடி வட்டாட்சியர் தமீம்ராஜா பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.