அரசாணையை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசாணையை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு சந்தனக்கட்டைகள் வழங்குவதற்கான அரசாணை - முதல்வர்  வழங்கினார்

Published on

சென்னை: நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்குத் தேவையான 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.2) தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் டாக்டர் எஸ். செய்யது காமில் சாஹிப், நாகூர் தர்கா தலைவர் எஸ். செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.

2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த தமிழக முதல்வர், கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார்.

இந்நிகழ்வில், வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in