

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.1) முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கப்பெறுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவை விட கூடுதலாக 35% முதல் 75% வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 29.10.2022 அன்று தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நவ.4-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய அணைகளில் / நீர்த்தேக்கங்களில், 43 நீர்த்தேக்கங்கள் 75% முதல் 100 % வரையும், 17 நீர்த்தேக்கங்கள் 50% முதல் 75% வரையும் நிரம்பியுள்ளன. எனவே இந்த நிலையில், மாநிலத்தில் அதிக கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இன்று ஆய்வு மேற்கொண்டார். கனமழை எச்சரிக்கை வரப்பற்றுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள்,
இதுபோன்ற பெருமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் இரவு பகல் பாராது பணியாற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கும் தமிழக முதல்வர் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, தொடர்ந்து இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.