போச்சம்பள்ளி பகுதியில் முள்ளங்கி விலை சரிவு: வருவாய் இழப்பால் விவசாயிகள் வேதனை

போச்சம்பள்ளி பனங்காட்டூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கியை தண்ணீரில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
போச்சம்பள்ளி பனங்காட்டூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட முள்ளங்கியை தண்ணீரில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: மகசூல் அதிகரிப்பால், போச்சம்பள்ளி பகுதியில் முள்ளங்கி விலை குறைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 4,735 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் முள்ளங்கி, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் சென்னை, திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. இதேபோல, வெளியூர் வியாபாரிகளும், விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது, விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக போச்சம்பள்ளி, பனங்காட்டூர் மோட்டுக் கொட்டாய் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கூறியதாவது: குறுகிய காலத்தில் வருவாய் கிடைப்பதாலும், வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து கொள்முதல் செய்வதாலும், பலர் முள்ளங்கி சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 80 முதல் 100 மூட்டைகள் வரை அறுவடை கிடைக்கும்.

ஒரு ஏக்கருக்கு நடவு, பராமரிப்பு, அறுவடைக்கு ரூ.22 ஆயிரம் வரை செலவாகிறது. தொடர்ந்து பெய்த மழையால், தற்போது வழக்கத்தை விட மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விலை குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு மேல் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது, ரூ.3 முதல் ரூ.7 வரை கொள்முதல் செய்கின்றனர். அறுவடை, பராமரிப்பு கூலி கூட கிடைக்காமல், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு மேல் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது, ரூ.3 முதல் ரூ.7 வரை கொள்முதல் செய்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in