Published : 28 Oct 2022 06:37 AM
Last Updated : 28 Oct 2022 06:37 AM
சென்னை: சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டம், முதல்கட்டம் நீட்டிப்பு பணிகள் முடிந்து, 54.1 கி.மீ. தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 173 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள்சென்னை பெருநகரில் இன்னும் சிலஆண்டுகளில் இயக்கப்படவுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் கோயம்பேட்டில் செயல்படுகிறது. கோயம்பேடு பணிமனை வளாகத்தில் அமைந்துள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் மெட்ரோ ரயில் இயக்கத்தையும், நிர்வாகப் பணிகளையும் மெட்ரோ ரயில் நிறுவனம் நிர்வகிக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தலைமையகக் கட்டிடத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி, அண்ணாசாலையில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த 8.96 ஏக்கர் நிலத்தில் ரூ.320 கோடி செலவில் சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடம் கட்டும் பணி சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிந்து, 'சிஎம்ஆர்எல் பவன்' என்ற பெயரில் கட்டிடம் தயாரானது.
இந்நிலையில், இந்த தலைமையகக் கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த தலைமையகம், தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டு12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டிடமாக அமைந்துள்ளது. இந்திய பசுமைக் கட்டிட மன்றத்தின் பிளாட்டின அளவு கோலின்படி பல்வேறு பசுமைக் கட்டிடக்கூறுகளுடன் கட்டப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டிடத்தில், மெட்ரோ ரயில் முதல் கட்டம், இரண்டாம் கட்டத்தின் இயக்கங்களைக் கண்காணிப்பதற்கான இயக்கக் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பேரிடர் காலங்களில் ஏற்கெனவே கோயம்பேட்டில் அமைந்துள்ள பிரதான இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ஏதேனும் பழுது ஏற்படும் பட்சத்தில் இது நிழல் மையமாகச் செயல்படவுள்ளது.
இந்தக் கட்டிடத்தில் அதிக நாட்கள் உழைக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடியகான்கிரீட் தொகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கட்டிடத்துக்குள் வெப்பம் கடத்துவது குறைவதுடன் குளிர்பதன தேவையும் குறைகிறது. மேலும், டுவீலர்மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்களுக்கு வாகனங்கள் நிறுத்துமிடத்திலேயே மின்னேற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஷ் குமார், எஸ்.மக்வானா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்ட கட்டிடம்: இந்த கட்டிடம் 12 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் 6 மாடிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும், மீதம் உள்ள 6 மாடிகள் தனியார் மற்றும் அரசுத் துறைக்கு வாடகைக்கும் விடப்படவுள்ளது. இதன் அருகிலேயே மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் உள்ளன. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முன்பு சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம் இயந்திரம்) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுழைவு வாயில் பகுதியில், பழங்கால கிணறு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில்,பெண்கள் தண்ணீர் இறைத்துகுடங்களில் எடுத்துச் செல்வதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT