Last Updated : 26 Oct, 2022 07:54 PM

 

Published : 26 Oct 2022 07:54 PM
Last Updated : 26 Oct 2022 07:54 PM

இரவு ரோந்துப் பணி போலீஸாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ்: தமிழக அரசின் புதிய உத்தரவுக்கு வரவேற்பு

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் 1,305 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள், 202 மகளிர் காவல் நிலையங்கள், 273 போக்குவரத்து, புலனாய்வு காவல் நிலையங்கள் மற்றும் 27 புறக்காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 23,542 பேர் மகளிர் காவலர்கள. இவர்களுக்கு தற்போது வரை சீருடைப் படி, நகர குடியிருப்பு படி, காவலர் முதல் ஏட்டுவரையிலும் இடிஆர் அலெவென்ஸ், கடந்த 6 மாதமாக பெட்ரோல் அலெவென்ஸ் (தினமும் ரூ.250), வெளியூர் சென்றால் டிராவல்ஸ் அலெவென்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் துறையினருக்கென சிறப்பு அலெவென்ஸ் கிடைக்குமா என எதிர்பார்த்த நிலையில், இரவு ரோந்து காவலர்களை ஊக்குவிக்கும் விதமாக மாதம் ரூ.300 வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு நகல்கள் மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழக காவல் துறையினருக்கு ஏற்கனவே பல்வேறு அலெவன்ஸ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒருவர் சுமார் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் இரவு ரோந்து பணி மேற்கொள் ளும் சூழல் உள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ.300 சிறப்பு அலெவென்ஸ் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள், ஆய்வாளர் வரையிலான அதிகாரிகளுக்கு இத்தொகை கிடைக்கும். இதற்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 42,00,22,800 வரை செலவாகும் எனத் தெரிகிறது. இந்த புதிய உத்தரவை தமிழக காவல் துறையினர் வரவேற்றுள்ளனர். ஓரிரு மாதத்தில் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல் துறையினர் கூறியது: “தமிழக காவல்துறையில் பெரும்பாலும், ஆங்லேயர் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிகையை இன்னும் தொடரும் சூழல் உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் போலீஸ் எண்ணிக்கை போதாது. கூடுதலாக பணி அமர்த்த வேண்டும். ஒருவர் தினமும் 3 ஷிப்ட் என்ற முறையில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பணியாற்ற வேண்டியுள்ளது. தற்போது இரவு ரோந்து பணி போலீஸாருக்கான சிறப்பு அலெவென்ஸ் என்பது நாள் ஒன்று ரூ.10 என்ற விகிதம் என்றாலும், சற்று உயர்த்தி வழங்கியிருக்கலாம். ஆனாலும், முதல்வரின் உத்தரவை வரவேற்கிறோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x