

கிருஷ்ணகிரி: சாலை வசதி இருந்தும், பேருந்துவசதியில்லாததால், வேப்பனப் பள்ளி அருகே 4 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் 8 கிமீ தூரம் நடந்தே பள்ளிக்கு செல்லும் நிலையுள்ளது.
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பீமாண்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர், சோமநாதபுரம், கங்கசந்திரம். இக்கிராம மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகள் உள்ளிட்ட விளை பொருட்களை விவசாயிகள் தினமும் குருபரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி, சூளகிரி பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், இக்கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ள நிலையில் 6-ம் வகுப்பு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கு மாணவ, மாணவிகள் குருபரப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், குருபரப்பள்ளிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் தினமும் 8 கிமீ தூரம் நடந்தே சென்று வருகின்றனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர் கிராமத்தில் இருந்து 200-க்கும்மேற்பட்ட மாணவர்கள் குருபரப் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். எங்கள் கிராமங்களில் சாலை வசதி இருந்தும் குருபரப்பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால், தினமும் மாணவர்கள் 8 கிமீ தூரம் நடந்தே பள்ளிக்கு சென்று திரும்புகின்றனர்.
சில மாணவர்கள் 8 கிமீ தூரத்தை குறைக்க கொல்லப்பள்ளி கிராமம் வழியாக செல்லும் மார்க்கண்டேய நதியை கடந்து புளியஞ்சேரி கிராமத்துக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் குருபரப்பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மார்க்கண்டேய நதியில் தண்ணீர் செல்கிறது. இதனால், ஆற்றை மாணவர்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலையுள்ளது. பல நேரங்களில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், அவ்வழியே செல்ல முடிவதில்லை.
இதனால், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மேலும், பேருந்து வசதியில்லாததால் பல மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதி கோரி தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. விவசாயிகள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி ஓட்டூர், பாறையூர், கொல்லப்பள்ளி, மாரிகவுண்டனூர் ஆகிய கிராமங்களில் இருந்து குருபரப்பள்ளிக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சில மாணவர்கள் 8 கிமீ தூரத்தை குறைக்க கொல்லப்பள்ளி கிராமம் வழியாக செல்லும் மார்க்கண்டேய நதியை கடந்து புளியஞ்சேரி கிராமத்துக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் குருபரப்பள்ளிக்கு செல்கின்றனர்.