திமுக அரசு எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் தமாகா அஞ்சாது: யுவராஜா

யுவராஜா | கோப்புப்படம்
யுவராஜா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "தமிழக மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, வழக்குத் தொடுப்பதில் நாட்டம் செலுத்தி வரும் திமுக அரசு இத்தகைய மக்கள் விரோதப் போக்கை, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, நேற்று (அக்.19) சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி உள்பட அதிமுகவினர் 1,300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நேரடியாக சந்தித்து பேசுவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய ராஜரத்தினம் மைதானத்திற்கு சென்றிருந்தார். காவல் துறையினர் அவரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால், அதை கண்டித்து ஜி.கே.வாசன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியாளர்களின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. பொதுமக்கள் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யும்போது கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அவர்களை சந்தித்து ஆதரவளிப்பது நடைமுறையாகும். அதன் அடிப்படையில் அவர்களை சந்திக்க சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மீது மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத ஆளுகின்ற திமுக அரசு காவல் துறையை தன் கைப்பாவையாக கையில் வைத்துக்கொண்டு அடக்குமுறையில் ஈடுபட்டு இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருக்கிறது.

நீங்கள் எவ்வளவு அடக்குமுறையை கையாண்டாலும், அதை தகர்த்து எறியக்கூடிய சக்தி எங்களுக்கு இருக்கிறது. எதையுமே சாதிக்க முடியாத, இந்த அரசை தமிழகம் பெற்றிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அரசு எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நெரிப்பதும், மக்கள் விரும்பாத செயல்களில் அரசு ஈடுபடுவதும் கண்டிக்கத்தக்கது.

திமுக அரசுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அரசின் அவலங்களை உணரத் தொடங்கியுள்ளார்கள். பொதுமக்கள் உரிமைக்காக எத்தனை வழக்குகளை எங்கள் மீது தொடுத்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது. இது போன்ற வழக்குகளுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்.

தமிழக மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, வழக்குத் தொடுப்பதில் நாட்டம் செலுத்தி வரும் திமுக அரசு இத்தகைய மக்கள் விரோதப் போக்கை, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in