அண்ணா சாலை மின் நிலையத்தில் தீ விபத்து

அண்ணா சாலை மின் நிலையத்தில் தீ விபத்து
Updated on
1 min read

சென்னை: சென்னை, அண்ணா சாலை, தர்கா அருகே தமிழ்நாடு மின்வாரியத்தின் 33/11 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் உள்ளது. மேலும், இங்கு பல்வேறு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த துணை மின்நிலைய வளாகத்தில் நேற்று அதிகாலை திடீரென புகை வந்ததை பணியிலிருந்த ஊழியர்கள் கண்டனர். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது பொறியாளர்கள் அலுவலகத்தில் தீப்பிடித்து மளமளவென தீ பரவியது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த 10 கணினிகள், சேர், டேபிள் என சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமானதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த தீவிபத்தில் துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள மின் விநியோக சாதனங்கள் ஏதும் சேதம் அடையவில்லை. இதனால், மின் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in