

சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தடங்கல் இல்லாமல் நேற்று முன்தினம் இரவு பூண்டி ஏரிக்கு வரத் தொடங்கியது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறந்து விடுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக ஜூலை 1-ம் தேதி முதல் நீரை திறந்து விடவேண்டும். ஆனால், ஆந்திர அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீசைலம் மற்றும் சோமசீலா அணை, கண்டலேறு அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீர் கடந்த மாதம் 10-ம் தேதி திறக்கப்பட்டது. தொடக்கத்தில் விநாடிக்கு 200 கனஅடி அளவில் திறக்கப்பட்ட நீர் பின்னர் படிப்படியாக உயர்த்தி, கடந்த மாதம் 6-ம் தேதி விநாடிக்கு 1,500 கனஅடி திறந்துவிடப்பட்டது. 18-ம் தேதி தமிழக எல்லைக்கு வந்த நீர் 20-ம் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.
இருப்பினும் திறக்கப்பட்ட தண்ணீரை விட தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைவாக இருந்தது. நீர் வரும் கிருஷ்ணா கால்வாயில் இருந்து மோட்டார்களை வைத்து ஆந்திர விவசாயிகள் சட்ட விரோதமாக நீரை உறிஞ்சியதுதான் நீர்வரத்து குறைவுக்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதற்கு முற்றுப் புள்ளிவைக்கும் விதமாக கண்ட லேறுவில் இருந்து நீர் திறப்பதை இம்மாதம் 7-ம் தேதி தற்காலிகமாக ஆந்திர அரசு நிறுத்தியது.
இந்தச் சூழலில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர் இருப்பு கணிசமாகக் குறைந்தது. இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிக ளின் கோரிக்கையை ஏற்று கடந்த 9-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் நீர் திறக்கப்பட் டது. தொடக்கத்தில் விநாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீர், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த 17-ம் தேதி விநாடிக்கு 1,700 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
இதற்கிடையே, கிருஷ்ணா நதி நீர் கண்டலேறு அணையில் இருந்து 152 கிமீ தூரமுள்ள தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தில் உள்ள ஜூரோ பாயிண்டுக்கு கடந்த 15-ம் தேதி நள்ளிரவு வந்தடைந்தது. அப்போது 25 கனஅடியாக வந்த நீர் அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு 17-ம் தேதி காலை வந்தடைந்தது.
நின்றுபோன நீர்வரத்து
அப்போது, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 20 கனஅடி கிருஷ்ணா நதி நீர்தான் வந்தது. அந்த நீரும் படிப்படியாகக் குறைந்து பின்னர் 20-ம் தேதி முற்றிலுமாக நின்றுவிட்டது. மீண்டும் நீர்வரத்தில் சிக்கல் ஏற்பட்டது.
ஆந்திர மாநில விவசாயிகள் தங்கள் நிலத்தில் பாசன வசதிக்காக கால்வாயில் உள்ள சுமார் 25 மதகுகளை அதிகாரிகளுக்குத் தெரியாமல் திறந்துவிட்டுள்ளனர். இந்தச் செயலால்தான் நீர்வரத்து நின்றுபோனது தெரியவந்தது.
இதுதொடர்பாக கடந்த 23-ம் தேதி தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஆந்திர அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன் விளைவாக, கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர பகுதிகளில் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா கால்வாய் மதகுகளை மூடினர்.
இதையடுத்து, கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட விநாடிக்கு 1,700 கனஅடி நீர் தடங்கல் இல்லாமல் பூண்டி ஏரிக்கு வரத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு விநாடிக்கு 60 கனஅடியாக வந்த நீர், நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 71 கனஅடி வீதம் பூண்டி ஏரிக்கு வரத் தொடங்கியது.
நேற்று காலை நிலவரப்படி ஜீரோ பாய்ண்ட்டுக்கு விநாடிக்கு 300 கனஅடி வருகிறது. இந்த அளவு படிப்படியாக அதிகரிக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடேயே 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 74 மில்லியன் கன அடியாக உள்ளது. இதில், சென்னையின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு விநாடிக்கு 30 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் தடங்கல் இல்லாமல் வரத் தொடங்கியுள்ளதால், படிப்படியாக பூண்டி ஏரியின் நீர் இருப்பும் அதிகரிக்கும் என்கிறார்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.