

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைக்கு பதில் சொல்ல பயந்து அதிமுகவினர் கூச்சலில் ஈடுபடுகின்றனர் என்று சட்டப்பேரவை அவை முன்னவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை அவையிலிருந்து வெளியேற்ற பேரவைத் தலைவர் அப்பாவு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இபிஎஸ் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது சட்டப்பேரவை அவை முன்னவர் துரைமுருகன் பேசியதாவது. இன்றையதினம், சட்டப்பேரவையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த அறிக்கைகளை தாக்கல் செய்தால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவர்கள் செய்த அநீதிகள், இவையெல்லாம் வெளியே வரும். எனவே அதற்கு பதில் சொல்ல முடியாத என்ற காரணத்திற்காக இன்றைக்கு இந்த நாடகத்தை ஆடுகின்றனர்" என்றார்.