புதுச்சேரி: கல்லூரி ஊழியர்களின் ரூ.8.84 கோடி சம்பளப் பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயம்

புதுச்சேரி: கல்லூரி ஊழியர்களின் ரூ.8.84 கோடி சம்பளப் பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on: 
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மகாத்மாகாந்தி முதுகலை பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்களின் ஊதியத்துக்கான பணம் ரூ. 8.84 கோடி, அவர்களுக்கான தனியார் வங்கி இருப்பில் இருந்து மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி கோரிமேட்டில் மகாத்மா காந்தி முதுகலை பல் மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளது. இது புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற அரசு பல் மருத்துவக் கல்லூரியாகும். புதுச்சேரி கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சமயங்களில் மாதந்தோறும் தொடர்ச்சியாக ஊதியம் வழங்கப்படுவது கிடையாது.

இது தொடர்பான நிதி நிர்வாக சிக்கல்கள் இருந்து வருகின்றன. இதை எதிர்த்து ஊழியர்கள் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு சேர்த்து தீபாவளியையொட்டி ஊதியம் போட நிதி ஒதுக்கப்பட்டது.

ஊதியத்துக்காக தனியார் வங்கியில் வைக்கப்பட்டிருந்த இக்கல்லூரிக்கான கணக்கில், ரூ.8.5 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இதைக் கொண்டு 3 மாதங்களுக்கு ஊதியம் போட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் ஊதியத்துக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் ஊதியம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. ஊதியம் வராததால் ஊழியர்கள் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் வங்கியில் இதுபற்றி தெரிவித்தார். அந்த குறிப்பிட்ட தனியார் வங்கி ஆய்வு செய்த போது, பல் மருத்துவ நிறுவனத்தின் கணக்கில் இருந்து பணம் மாயமானது தெரியவந்தது.

பணம் மாயமானது தொடர்பாக கல்லூரி முதல்வர் கென்னடி பாபு, புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் தலைமையில் போலீஸார் பல் மருத்துவக் கல்லூரி, வங்கி தரப்பில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆன்லைன் மோசடி கும்பல் தொடர்பு இதில் உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி: கல்லூரி ஊழியர்களின் ரூ.8.84 கோடி சம்பளப் பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயம்
சிறப்பு டெட் தேர்ச்சி மதிப்பெண்: அனைத்துப் பிரிவினருக்கும் 60 ஆக நிர்ணயிக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்

X