Published : 15 Oct 2022 06:27 PM
Last Updated : 15 Oct 2022 06:27 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து போராட்டம் இன்று நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், மாநில திமுக அழைப்பாளருமான சிவா தலைமை தாங்கினார்.
எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதில் அமைப்பாளர் சிவா பேசியதாவது:‘‘மாநில மொழிகளை அழித்து இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக முடியும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் உலகம் முழுக்க பெருமை சேர்க்கும் வகையில் டாக்டராக, இன்ஜினியராக, விஞ்ஞானியாக இல்லை. அந்த மாநிலங்களும் வளர்ச்சி பெறவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11–வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போராகும்.
கடந்த செப்டம்பர் 14–ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'இந்தி நாள்' விழாவில் உரையாற்றியபோது, 'ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவதுதான் பாஜக அரசின் நோக்கம்' என்று அறிவித்தார். இருமொழி கொள்கைகளை சிதைத்து மும்மொழி கொள்கைகளை திணிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக எழுச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. மேற்குவங்க போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் படம் வைத்து போராட்டங்களை நடத்துகின்றனர். அந்தளவு இந்தியா முழுவதும் நமது போராட்டம் பரவியுள்ளது.
திமுகவுக்கு ஆட்சி முக்கியமில்லை, பல முறை ஆட்சியை இழந்துள்ளோம். பூச்சாண்டிக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல. திமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. தலைமை தபால் நிலையத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது ஸூட்டிங் ஆர்டர் போடுவோம் என்றனர்.
ஜனநாயகத்தில் கடமை, கண்ணியத்துடன் போராட்டம் நடத்த நினைக்கின்றோம். திமுக எத்தனையோ ஷூட்டிங் ஆர்டர்களை பார்த்துள்ளது. திமுக திருட்டுத்தனமாக ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல. கொள்கை இல்லாமல் விலைபேசி ஆட்களைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் கிடையாது.
திமுக 27 ஆண்டாக ஆட்சியில் இல்லை, ஆனாலும் போராட்டத்துக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். போராட்டம் உணர்வு சார்ந்தது, இன்னும் கூட கூட்டத்தை கூட்டுவோம். இந்தி திணிப்பை கைவிடாவிட்டால், போராட்டம் தொடரும்.
மத்திய அரசின் முகமூடி மக்களுக்கு தெரிந்துவிட்டது. புதுச்சேரியில் மின்துறை, சுற்றுலாத்துறை என அனைத்தும் குட்டிச்சுவர் ஆக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றீர்கள். தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. புதுச்சேரி ஆளுநர் அரசியல் செய்வதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும். புதுச்சேரி வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று ஜனநாயகத்தின் அடிப்படையில் மரியாதை கொடுத்து பேசி வருகின்றோம். ஆனால் ஆளுநர் என்பதை மறந்து 2024 ஆட்சிக்கு பாஜக வருவதற்கான ஆலோசனை குழுவில் பங்கேற்று கருத்துக்களை கூறி வருகின்றார். இவ்வளவு மோசமாக செயல்படுகின்றார்.
இவர் புதுச்சேரியின் ஆளுநராக பொறுப்பேற்றவுடன் செய்த காரியம், ஆட்சியை கலைத்ததுதான். புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவரும் ஜனநாயக மரபுகளை மீறுகின்றார். பாஜகவின் சித்தாந்தம் தமிழகம், புதுச்சேரியில் ஒரு காலமும் எடுபடாது.’’இவ்வாறு சிவா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT