மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கற்பகம் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2020 -21 ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. எனவே மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக அரசுக்கு கடந்த செப்டம்பரில் மனு அளித்தேன். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in