

மதுரை: தமிழகத்தில் முதன்முறையாக காவல் நிலையங்களில் புகார்தாரர்கள் கனிவுடன் நடத்தப்படுகிறார்களா என்பதை அறிந்துகொள்ளும் வகையிலான போலீஸாரை கண்காணிக்கும் புதிய திட்டத்தை காவல் ஆணையர் செந்தில்குமார் இன்று தொடங்கி வைத்தார். மதுரை மாநகரில் 28 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் புகார் அளிக்க வரும் பொதுமக்களை நன்முறையில் நடத்தப்பவதை உறுதி செய்து, குறைகளை விரைவாக தீர்க்கும் விதமாக 'கிரியேட்' (கிரிவன்ஸ் ரெட்ரசல் அன்டு டிராக்கிங் சிஸ்டம்) என்ற புதிய திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கான கண்காணிப்பு திரை அலுவலகத்தை காவல் ஆணையர் செந்தில்குமார் இன்று தொடங்கி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் கூறியது: ''இப்புதிய திட்டம் ஏற்கெனவே சேலத்தில் ஒரு பகுதியாக செயல்பட்டாலும், ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் பொதுமக்களின் புகார்கள் பதிவு குறித்த நேரடி காட்சிகளை வீடியோ பதிவுடன் கண்காணிப்பது போன்ற முழு செயல்பாடுகளுடன் கூடிய வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரையில்தான் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு கணினி நிறுவப்பட்டு, வரவேற்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் புகார்தாரர், அவர்களின் மனுக்கள் விவரம் பதியப்படும். இப்பதிவுகளை மாநகர காவல் அலுவலகத்தில் நிறுவிய சர்வர் மூலம் காணிக்கப்படும். பிறகு மனுதாரர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு காவல்துறையினர் நடத்தப்பட்ட விதம், குறைகள் முறையாக விசாரிக்கப்பட்டதா என, தகவல்கள் சேகரிக்கப்படும்.
இதன்மூலம் காவல் நிலைய வரவேற்பாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மனுதாரர்களை கண்ணியமாக நடத்துவது உறுதி செய்யப்படும். ஏதேனும் குறைகள் இருப்பினும், உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்கப்படும் மீனாட்சி கோயில், அரசு மருத்துவமனை, உயர்நீதி மன்ற காவல் நிலையங்கள் தவிர, எஞ்சிய 25 காவல் நிலையத்தில் இத்திட்டம் முதல் அமலுக்கு வந்துள்ளது.
காவல் நிலையங்களில் மக்கள் நீண்டநேரம் காத்திருப்பது உறுதிப்படுத்த காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுவிய கேமரா மூலம் கண்காணித்து, உடன் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தகவல் தெரிவிக்க, விரும்பினால் 0452-2520760 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்று அவர் கூறினார். நிகழ்வில் துணை ஆணையர்கள் சீனிவாச பெருமாள், மோகன்ராஜ், வனிதா மற்றும் உதவி ஆணையர் வேல்முருகன் (நுண்ணறிவுப் பிரிவு) கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து) திருமலை, சூரக்குமார் (அண்ணாநகர்) உள்ளிட்ட உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.