

மதுரை: “தமிழ் கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கின்றன” என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''சுத்தம் சோறு போடும் என்பதற்கேற்ப ஒவ்வொரு இடத்திலும் தூய்மை முக்கியம். தூய்மை நகரம், மாநிலம் குறித்து வரிசை பட்டியலை மத்திய அரசு தயாரித்தது. தமிழகம் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு வகையில் முதல் நிலையில் இருந்தாலும், 2022-ம் ஆண்டுக்கான தூய்மை பட்டியலில் இடம் பெறவில்லை. பின்தங்கிய மாநிலமான சத்தீஸ்கர் முதலிடத்திலுள்ளது. மாநகராட்சிகளில் குஜராத், மகாராஷ்டிரா, புனே போன்றவை இடம் பெறுகின்றன.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்கள் முதல் 10 இடங்களில் கூட வரவில்லை. கோவை-42, சென்னை- 44, மதுரை -45வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. இதில் எங்கோ குறைபாடு உள்ளது. இதை களைந்து முதலிடத்திற்கு தமிழகத்தை கொண்டுவர மதுரை, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், தூத்துக்குடி போன்ற இடங்களில் மக்கள் இயக்கம் நடத்த உள்ளோம்.
இதன் மூலம் தூய்மையின் அவசியத்தை மக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தமிழகம் தூய்மையில் முதன்மை பெற மாநகராட்சி, உள்ளாட்சிகள் அமைப்புகள் இணைந்து செயலாற்றவேண்டும். தூய்மையின்மை காரணமாகவே கடந்த 3 ஆண்டாக டெங்கு, மலேரியா போன்ற பல நோய்கள் மக்களை தாக்குகின்றன. சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பத்திகையாளர்களை இணைத்து முதலில் கோவையில் மக்கள் இயக்கம் தொடங்கி, படிப்படியாக எல்லா மாவட்டத்திற்கும் செல்வோம். தமிழகத்தில் மின்சார கட்டணம் மக்களை பாதித் துள்ளது. இதை குறைக்கவேண்டும்.
மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கெடுக்கும் தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றவேண்டும். இவற்றை வலியுறுத்தில் மதுரை நவ.,1-லும், கோவையில் நவ., 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
தமிழ் திரைப்படங்களில் ஆபாசம், அரிவாள் கலாசாரத்தை முழுக்க சொல்லிவிட்டு, கடைசி ஒரு நிமிடம் பாசிட்டிவ் கருத்துக் சொல்லவதை ஏற்க முடியாது. திரைப்படம் அரசியலை கைப்பற்ற நினைக்கிறது. விருமாண்டி, கொம்பன் போன்ற வன்முறை படங்களை நாங்கள் எதிர்த்தபோது, கருத்துச் சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றனர். தற்போது, திரைப்படங்கள் மூலம் அரசியல் பேசுகின்றனர். இது தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திரைத்துறையில் முதலீடு செய்வோர் சம்பாதிக்கலாம். அதற்காக தமிழக இளைஞர்களை சீரழிக்கக்கூடாது. பெரியார் மது, சினிமாவை ஒழிக்கவேண்டும் என்றார். ஆனாலும், இன்றைக்கு நடிகர்களால் தமிழகம் சீரழிகிறது.
சினிமாவால் இளைஞர்கள் மது, போதை மாத்திரைக்கு அடிமையாகின்றனர். பஞ்ச பூதங்களை வழிப்படும் முறை இந்தியாவில் உள்ளது. எந்த வழிபாடும் நேரடியாக நடைமுறைக்கு வரவில்லை. சூழலுக்கு ஏற்ப மாறியிருக்கலாம். சிவபெருமானை வழிப்படுவர் இந்துவாக தானே இருக்க முடியும். மதம் பற்றி அடிப்படை தெரியாமல் திரைப்படம் எடுக்கின்றனர். பாரம்பரியம், கலாசாரம், பண்பாடுகளை தெரிந்து கொண்டு பொதுத் தளத்திற்கு வரவேண்டும். இல்லையெனில் அந்நிய நாட்டு ஏஜன்டுகளாக செயல்படுகின்றனர் என, பொருளாகிவிடும். நமது கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கும் விதமாக செயல்படுகின்றன. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். தேர்தல் நேரத்தில் எங்களது நிலைப்பாடு தெரியும்'' என்று அவர் கூறினார்.