

சூளகிரி சந்தையில் செப்டம்பர் மாதம் ஒருகட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட கொத்தமல்லி தற்போது, 95 சதவீதம் விலை சரிந்து, ரூ.5-க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. குறிப்பாக காய்கறிகள் சாகுபடியில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
40 நாட்களில் அறுவடை: இதில், சூளகிரி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விதைக்கப்பட்ட 40 நாட்களில் கொத்தமல்லி அறுவடைக்கு கிடைப்பதாலும், சந்தை வாய்ப்பு இருப்பதாலும் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி சூளகிரியில் உள்ள கொத்தமல்லி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
விலை நிர்ணயம்: இந்நிலையில், சூளகிரி சந்தையில் செப்டம்பர் 20-ம் தேதி ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 15 நாட்களில் விலை கடுமையாக சரிந்து ஒரு கட்டு ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படு கிறது. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும்வியாபாரிகள் கூறியதாவது: சூளகிரி கொத்தமல்லி சந்தைக்கு விற்பனை வரத்தை பொறுத்தும், திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த நாட்களில் கொத்தமல்லியின்தேவையை பொறுத்தும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால், கொத்தமல்லி அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால், ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.100-க்கு விற்பனையானது.
தற்போது, மகசூல் அதிகரித்துள்ளதால், ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனையாகிறது. இதனால், அறுவடை கூலி கூட விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. மழை பெய்து செடி வீணாகி போனதாலும், தற்போதுவிலை குறைந்துள்ளதாலும், விவசாயி களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சந்தையில் அடிப்படை வசதி தேவை: கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலை அடிவாரத்தில் சூளகிரி கொத்தமல்லி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இதனால், இங்கு கொள்முதல் செய்ய வரும் வெளியூர் வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.