

ஆண்டுதோறும் நகருக்குள் வெள்ளத்தையும், விளைநிலங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும் கீரிப்பள்ளம் ஓடை, இந்த ஆண்டு பருவமழையை எதிர்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் ஓடையில் கழிவுகள் கலப்பதைத் தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறப்புத்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி நகரின் மையப்பகுதியில் ஓடும் கீரிப்பள்ளம் ஓடையின் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாலும், கழிவுநீர் கலப்பதாலும் ஓடையின் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது என, ‘இந்து தமிழ் திசை - உங்கள் குரல்’ பகுதியில் கோபியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், கீரிப்பள்ளம் ஓடை குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: கோபி நகரின் தென்மேற்கு பகுதியில் உருவாகும் பெரும்பள்ளம் ஓடையும், திருப்பூர் மாவட்டம் கெட்டிச்சேவூரில் உருவாகும் கீரிப்பள்ளம் ஓடையும், கோபி நகரின் மையப்பகுதியில் இணைகிறது.
கோபி நகரில் அழகான மழைநீர் ஓடையாய் விளங்கிய கீரிப்பள்ளம் ஓடை, தற்போது நகரின் திட, திரவ கழிவுகளால் சாக்கடையாக மாறி நிற்கிறது.
120 அடி அகலம் கொண்ட கீரிப்பள்ளம் ஓடையும், 60 அடி அகலம் கொண்ட பெரும்பள்ளம் ஓடையும், கரைகளில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளால், தற்போது 40 அடியாக சுருங்கி நிற்கிறது. பருவமழை காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், ஆண்டுதோறும் கோபி நகரின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது.
இது குறித்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனசபை தலைவர் சுபி.தளபதி கூறியதாவது: கோபி நகராட்சியின் அனைத்து கழிவுகளும் கீரிப்பள்ளம் ஓடையில் கலக்கிறது.
பருவமழைக் காலத்தில் இந்த கழிவுகள் அடித்து வரப்பட்டு, தடப்பள்ளி - கூகலூர் கிளை வாய்க்காலில் கலந்து, அங்குள்ள பாசன நிலப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், இப்பகுதி நிலத்தில் உப்பின் அடர்வுத்தன்மை (டிடிஎஸ்) 4,000 பிபிஎம் என்ற அளவு உயர்ந்துள்ளது.
கீரிப்பள்ளம் ஓடை முறையாக தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில், தடப்பள்ளி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, பாரியூர், நஞ்சகவுண்டன் பாளையம், வெள்ளாளபாளையம் பகுதிகளில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
காற்றில் பறந்த அறிவிப்பு: விவசாய சங்கங்களின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து, பதி என்ற இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்தது.
ஆனால், இதுவரை இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, இயற்கையான மழைநீர் ஓடையாக கீரிப்பள்ளம் ஓடையை மாற்ற அரசு சிறப்புத் திட்டம் தீட்ட வேண்டும், என்றார்.
கோபி நகராட்சி ஆணையரிடம் பேசியபோது, ‘பருவமழையை சமாளிக்கும் வகையில், கீரிப்பள்ளம் ஓடை தூர் வாரப்பட்டுள்ளது. நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிறைவடைந்ததும், கசடு கழிவுநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நான்கு மாதங்களில் அதுவும் அமலுக்கு வந்து விடும்’ என்றார்.
பொதுப்பணித்துறை கோபி எஸ்டிஓ-விடம் பேசியபோது, ‘கீரிப்பள்ளம் ஓடை நீர் கோபி நகருக்குள் நுழையாதவாறு, பெரியார் திடல், லாரிஷெட் பகுதி, மொடச்சூர் சாலை சேரன் நகர் ஆகிய பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் தான் அகற்ற வேண்டும். விளைநிலங்களில் கழிவுநீர் புகுவதைத் தடுக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.