Published : 06 Oct 2022 07:48 AM
Last Updated : 06 Oct 2022 07:48 AM

வேடந்தாங்கலில் சுற்றுச்சூழல் அனுமதி இன்றி செயல்பட்ட தனியார் நிறுவனம் ரூ.10 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு

சென்னை: சென்னை ராயபுரத்தை சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த 2020-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பிரதான பகுதிக்கு அருகில் சன் பார்மாசுடிகல் என்ற மருந்து உற்பத்தி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டு, 2000-ம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கியது. 1994-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிவிக்கையின்படி, இதுபோன்ற மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாக மேற்கூறிய அறிவிக்கையின்கீழ் முன்அனுமதி பெற்று இயங்க வேண்டும். ஆனால் சுற்றுச்சூழல் அனுமதிபெறாமல் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது கடந்த 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின்படியும் சுற்றுச்சூழல் அனுமதிபெறாமல், விதிகளை மீறி இயங்கி வந்துள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,கடந்த 2020-ம் தேதி இந்த நிறுவனத்தை இயக்க இசைவாணையை வழங்கியுள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை விதிகளின்கீழ் சுற்றுச்சூழல் முன்னனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்த தவறியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 2008-ம் ஆண்டு அனைத்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின் (2006) கீழ் பெறப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி இன்றி தடையில்லா சான்று அல்லது நிறுவனத்தை இயக்குவதற்கான இசைவாணை வழங்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீறியுள்ளது.

இதுபோன்ற விதிமீறல்களால், அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்யும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஏரிமற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளை பாதிக்கும். எனவே இந்த நிறுவனத்தால் வேடந்தாங்கல் ஏரி மற்றும் அதை சுற்றியுள்ள ஏரிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிய வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும். விதிகளை மீறி செயல்பட்டு வந்த சன் பார்மாசுடிகல் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை இந்நிறுவனத்துக்கு விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் கடந்த வாரம் வழங்கினர். அத்தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சன் பார்மாசுடிகல் நிறுவன விரிவாக்கம், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நடப்பதாக இந்த ஆண்டுதொடரப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், இந்நிறுவனத்தை மூட உத்தரவிட இயலாது.

இந்நிறுவனத்தின் திறமையற்ற வழிமுறை போன்ற விதிமீறலால் நிலத்தடி நீர் மற்றும் மண்ணை மாசுபடுத்தியதற்காக கூட்டுக்குழு விதித்த ரூ.58 லட்சத்து 20 ஆயிரம்சுற்றுச்சூழல் இழப்பீட்டை தீர்ப்பாயம் உறுதி செய்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி இன்றி செயல்பட்டதற்காக இந்நிறுவனம் ரூ.10 கோடிஇடைக்கால இழப்பீட்டு தொகையை 6 மாதங்களுக்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி இன்றி, விதிகளை மீறி நிறுவனம் இயங்கிய காலத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பீடு செய்து சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகையை விதிக்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பயன்பெறும் வகையிலான செயல் திட்டத்தை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்,தலைமை வன உயிரின காப்பாளர் ஆகியோர் உருவாக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x