Published : 05 Oct 2022 11:03 PM
Last Updated : 05 Oct 2022 11:03 PM
கோவை: முன்பதிவு செய்த பயணச்சீட்டை தொலைத்த பயணிக்கு கட்டணத்தை திருப்பி அளிக்க மறுத்த அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த நிவாஸ், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், "குடும்ப நிகழ்ச்சிக்காக நானும், எனது மனைவியும் அவசரமாக கடந்த 2017 மார்ச் 27-ம் தேதி புதுச்சேரி செல்ல வேண்டியிருந்ததால் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவுப்போக்குவரத்துக்கழக (எஸ்இடிசி) கவுன்ட்டரில் ரூ.620 செலுத்தி முன்பதிவு செய்தேன். இந்நிலையில், வீட்டுக்கு சென்று பார்த்தபோது டிக்கெட்டை காணவில்லை. இருப்பினும், அந்த டிக்கெட்டை செல்போனில் படம்பிடித்து வைத்திருந்தேன். மறுநாள் போக்குவரத்துக் கழக உதவி மேலாளரை சந்தித்து நடந்தவற்றை விளக்கினேன்.
அவர், புதிதாக இரண்டு டிக்கெட்டுகளை பெற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், டிக்கெட் கவுன்ட்டரில் இருந்த நபர், தொலைந்துபோன அசல் டிக்கெட்டை காண்பித்தால் ஒழிய ஏற்கெனவே செலுத்திய கட்டணத்தை திருப்பி அளிக்க வழியில்லை என்று தெரிவித்தார். டிக்கெட் முன்பதிவின்போது அளித்த படிவத்துடன் எனது அடையாள அட்டையை ஒப்பிட்டு ஏற்கெனவே நான் செலுத்திய பணத்தை அவர்கள் திருப்பி அளித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மேலும், என்னிடம் தொலைந்துபோன டிக்கெட்டுக்கான புகைப்படம் இருந்தும், வேறு வழியின்றி மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்தேன். எனவே, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சேவை குறைபாடு ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
கோவையில் நடைபெற்று வந்த இந்த வழக்கு திருப்பூருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் எஸ்.தீபா, உறுப்பினர்கள் எஸ்.பாஸ்கர், வி.ராஜேந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "டிக்கெட் தொலைந்தபிறகு அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்தை தொடர்புகொண்ட மனுதாரர், அதன் (டூப்ளிகேட்) நகலை பெற முயன்றுள்ளார். மேலும், அவரிடம் அசல் டிக்கெட்டின் புகைப்படமும் இருந்துள்ளது. ஆனால், மனுதாரரின் நியாயமான கோரிக்கை போக்குவரத்துக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கட்டணமும் திருப்பி அளிக்கப்படவில்லை.
அவர்களின் இந்த செயல் மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மனுதாரர் டிக்கெட் முன்பதிவுக்காக செலுத்திய ரூ.620-ஐ திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரத்தை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT