பாப்ஸ்கோ ஊழியர்கள் உடனான புதுச்சேரி அமைச்சரின் பேச்சுவார்த்தை தோல்வி

பாப்ஸ்கோ ஊழியர்கள் உடனான புதுச்சேரி அமைச்சரின் பேச்சுவார்த்தை தோல்வி
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாப்ஸ்கோ ஏஐடியுசி ஊழியர்களை அழைத்து அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், எழுத்துபூர்வ உத்தரவாதம் கேட்டதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

புதுச்சேரியில் 60 மாத நிலுவை ஊதியம், பண்டிகை கால பணிக்கான கமிஷன் தொகை வசூல், ஓய்வு கால பண பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாப்ஸ்கோ ஏஐடியுசி ஊழியர்கள் ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரே பல கட்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 12-வது நாளாக நீடித்தது. ஏற்கெனவே மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரே பலகட்ட போராட்டங்களை நடத்திய பாப்ஸ்கோ ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர். இன்று தட்டாஞ்சாவடியில் உள்ள பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பாப்ஸ்கோ தலைமை அலுவலகம் வந்த அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். துறை செயலர் உதயகுமார் உடனிருந்தார். பாப்ஸ்கோ ஏஐடியுசி ஊழியர்கள் தரப்பில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், அபிஷேகம், தினேஷ் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களது நீண்டகால கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். மேலும், முதல் கட்டமாக 30 மாத ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். அதை கேட்டறிந்த அமைச்சர் 2 மாதம் கால அவகாசம் அளிக்குமாறும், அதற்குள் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இருப்பினும் இதை எழுத்துபூர்வ உத்தரவாதமாக தங்களுக்கு தருமாறு நிர்வாகிகள் கேட்டனர். அதற்கு அமைச்சர் நாளை முதல்வரிடம் ஆலோசனை செய்துவிட்டு மீண்டும் பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தெரிவித்தார். இதனால் சுமுக முடிவு ஏற்படாத நிலையில் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு பாப்ஸ்கோ ஊழியர்கள் வெளியே வந்தனர். இது தொடர்பாக ஏஐடியுசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம் கூறும்போது, ''பாப்ஸ்கோ ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும். நாளை மீண்டும் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in