

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருந்து தட்டுப்பாட்டை போக்கக் கோரியும், நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 47 ஆயிரத்து 300 பேர் புறநோயாளிகளாகவும், 76 ஆயிரத்து 700 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஆனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகளிடம் வெளியில் சீட்டு எழுதி கொடுத்து மருந்துகளை வாங்கிவரச் சொல்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 22-ம் தேதிநேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நோயாளிகளுக்கு 100 சதவீதம் இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். ஆனாலும் நோயாளிகளுக்கு வெளியே மருந்து வாங்க சீட்டுகள் எழுதிக்கொடுப்பது தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருப்தும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாட்டை போக்கக்கோரியும், நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் புதுச்சேரி மாநில பாமக இளஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் கணபதி கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, "ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து, மாத்திரை இருப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது. எனவே ஜிப்மர் இயக்குநர் மெத்தன போக்குடன் செயல்படாமல் உடனடியாக மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும்." என்றார். 100-க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்கள் உயிர்களின் மீது விளையாடாமல், மத்திய அரசு உடனடியாக மருந்து தட்டுபாட்டை போக்க வழிவகை செய்திட வேண்டும்.
ஜிப்மர் நிர்வாகம் மொழிக்கு காட்டும் அக்கரையை, மக்கள் உயிர்க்கும் காட்ட வேண்டும். நோயாளிகளுக்கு படுக்கை வதிகளை ஏற்படுத்தி தர மறுக்கும் ஜிப்மர் நிர்வாக இயக்குநரை உடனடியாக மத்திய அரசு பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் பயிற்சி மருத்துவர், தமிழ் தெரியாதவர்களை வைத்து, மருத்துவம் பார்த்து மக்கள் உயிரை பலியாக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டிப்பது போன்ற கோரிக்கைகள் வலியறுத்தப்பட்டன.