

விழாவில் ‘தமிழ்திரு’ விருது பெற்ற ஆளுமைகள் ஏற்புரை நிகழ்த்திப் பேசியதாவது: மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை: என்னைப் பற்றிய சிறப்பான அறிமுகத்தை ‘இந்து தமிழ் திசை’ கொடுத்துள்ளது. இந்த ஆண்டு விருதுகளின் ஆண்டாக எனக்கு அமைந்திருக்கிறது. கடந்த 30 மாதங்களாகக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, எனதுமன உறுதியால், எனது எழுத்துப்பணிகளையும், படிப்பு பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். எனக்கு இந்த விருது மேலும் ஊக்கம் தருகிறது. ‘இந்துதமிழ் திசை’யை சேர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நில உரிமைப் போராளி கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்: 1957-ல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வினோபா பாவே, ‘‘உழுதவனுக்குதான் நிலம் வேண்டும். மற்றவர் கைகளில் நிலம் இருக்க கூடாது’’ என்றார். அவரது இந்த துருப்பை எடுத்துக்கொண்டு, இன்னும் அதற்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு வயது ஆகிவிட்டது. அதனால் வெளியே செல்ல வேண்டாம்என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். 96 வயதில் இன்னும் சாப்பிடுகிறேனே, அந்த சாப்பாட்டுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா. அதனால், ‘என்னை வெளியே விடுங்கள், இன்னும் 5 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்துக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறேன்.
எழுத்தாளர் சி.எம்.முத்து: ‘தமிழ் இந்து’வை வெறும் செய்திபத்திரிகையாக நாங்கள் பார்ப்பதில்லை. ஓர் இலக்கிய இதழை வாங்கும் மகிழ்ச்சியோடுதான் இன்று வரை ‘தமிழ் இந்து’வை வாங்கி வருகிறோம். அதுதான் உண்மை. காலம் உள்ளவரை தமிழ் எப்படி இருக்குமோ, அதேபோல, ‘இந்து தமிழ் திசை’ இருக்கும்.
தொழிலாளர் நல செயல்பாட்டாளர் ஆர்.கீதா: (தன்னுடன் இணைந்து போராடும் தொழிற்சங்க பிரதிநிதிகளை மேடையில் அறிமுகம் செய்த பிறகு, அவர் பேசியதாவது:) ‘யாதும் தமிழே’ என்று கூறுவது உண்மைதான். தமிழகத்தில் இருந்து சென்றுதான் தேசிய அளவில் போராடி, மத்தியஅரசை, கட்டிடத் தொழிலாளர்களுக்கான 2 சட்டங்களைக் கொண்டுவர வைத்தோம். அது தொடர் போராட்டம். மத்திய அரசின்சட்டங்களில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஷரத்துகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், பாதுகாப்பு இல்லாத தொழிலாக கட்டுமானத் தொழில் மாறும் ஆபத்து உள்ளது.போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கும் நிலை உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றம், போதைப் பொருட்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் போராடி வருகிறோம். எங்கள் போராட்டங்களை அனைத்து தரப்பினரும் ஆதரிக்க வேண்டும்.
சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் சிவசுப்பிரமணியன்: (தவிர்க்க முடியாத காரணத்தால் ஆ.சிவசுப்பிரமணியன் விழாவுக்கு வராததால், அவரது சார்பாக பேரன் அரவிந்தன் விருதைப் பெற்றுக் கொண்டார். சிவசுப்பிரமணியன் கடிதமாக அனுப்பியிருந்த ஏற்புரை, விழாவில் வாசிக்கப்பட்டது.) விளிம்பு நிலையினர், அடித்தள மக்கள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் எளிய மக்களின் வாழ்வியல்தான் எனது நூல்களில் கருப்பொருளாக இருந்தது. ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தமிழ்திரு’ விருதை ஆன்றறிந்த கொள்கைச் சான்றோர்கள் நால்வருடன் இணைந்து பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.