

உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த காஸ்ட்ரோவுக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு குறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். காஸ்ட்ரோவின் மரணச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அமெரிக்கா என்ற நாட்டிற்கு ஒட்டுமொத்த உலகமும் அஞ்சி நடுங்கிய போதிலும், அந்த நாட்டுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ. ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருந்த ரஷ்யாவும், சீனாவும் கூட ஒரு கட்டத்தில் அமெரிக்காவை அனுசரித்துச் செல்லத் தொடங்கி விட்ட நிலையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையிலிருந்து சற்றும் பின்வாங்காதவர் ஃபிடல்.
மாறாக அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமா கியூபாவுக்கு சென்று கடந்த காலத்தில் அளித்த நெருக்கடிகளுக்காக வருத்தம் தெரிவிக்கும் நிலையை ஏற்படுத்திய பெருமையும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு மட்டுமே உண்டு.
புரட்சியாளர்கள் அனைவரும் சிறந்த நிர்வாகிகளாக இருப்பதில்லை என்றொரு கருத்து உலகில் நிலவியது. ஆனால், அந்த கருத்தையும் முறியடித்த பெருமை காஸ்ட்ரோவுக்கு உண்டு. 1959- ஆம் ஆண்டு முதலாளித்துவ சர்வாதிகாரி பாடிஸ்டாவை கியூப புரட்சி மூலம் வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த காஸ்ட்ரோவிடம் இருந்த ஒரே மூலதனம் மக்கள் ஆதரவு மட்டும் தான்.
அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்ததால் வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகளின் ஆதரவும் அவருக்கு இல்லை. ஆனால், அதையெல்லாம் கண்டு கலங்கி நிற்காமல் தமது 50 ஆண்டு கால ஆட்சியில் கியூபாவை கல்வியில், மருத்துவத்தில், விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றினார். காஸ்ட்ரோவின் நிர்வாகத்திறமைக்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் தேவையில்லை.
புரட்சியாளராக இருந்தாலும் மனித நேயம் கொண்டவராக திகழ்ந்தவர். மக்களின் தலைவராக விளங்கியவர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட, பாமக ஆட்சிக்கு வந்தால் கியூபாவில் வழங்கப்படுவது போன்று தமிழகத்திலும் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும் என்று நான் பிரச்சாரம் செய்தேன். அந்த அளவுக்கு உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த காஸ்ட்ரோவுக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன்.
காஸ்ட்ரோ உடலால் மறைந்தாலும், அவரால் கிடைத்த விடுதலையும், வளர்ச்சியும் நீடிக்கும் வரை கியூபா நாட்டு மக்களின் மனதில் ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்வார். உலகில் பொதுவுடைமையை விரும்பும் அனைவராலும் நினைவு கூரப்படுவார்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.