

சொத்து, தொழில் வரியை பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செலுத்தலாம் என்று அறிவிக்கப் பட்டதை அடுத்து, சென்னை மாநகராட்சி வரி வசூல் 12 நாட்களில் ரூ.76 கோடியைத் தாண்டியது.
சென்னை மாநகராட்சியில் சொத்து, தொழில் வரிகள் ரொக்கமாகப் பெறப்படுவதில்லை. காசோலை, வரைவோலையாக மட்டுமே பெறப் படுவது வழக்கம். மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்களை பொதுமக்கள் பழைய நோட்டுகளாகவும் செலுத்த லாம் என்று அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, வரி மற்றும் கட்டணங் களை பழைய நோட்டுகளாக பெறும் முகாம் சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 13-ம் தேதி முதல் நேற்று வரை 12 நாட்கள் நடத்தப்பட்டது. 446 இடங்களில் நடத்தப்பட்ட முகாம்களில் மொத்தம் ரூ.76 கோடியே 17 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
உழைப்புக்கு கிடைத்த பலன்
மாநகராட்சி ஊழியர்கள் கடந்த 12 நாட்களாக வார விடுப்புகூட எடுக்கா மல், வரி வசூலில் முழு மூச்சாக ஈடுபட்டனர். பல மண்டலங்களில் அவர்களாகவே விரும்பி, நடமாடும் முகாம்கள் நடத்தி தெருத் தெருவாக வரி வசூலில் ஈடுபட்டு, ரூ.76 கோடியே 17 லட்சம் வசூலை எட்டியுள்ளனர்.
மாநகராட்சியில் ஆண்டுதோறும் ரூ.650 கோடி அளவுக்கு வரி வசூலாக வேண்டும். ஆனால் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் சராசரியாக ரூ.450 கோடி வரைதான் வசூலாகிறது. பழைய ரூபாய் நோட்டுகளையும் வரியாக செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் இப்பணியில் தீவிரமாக களமிறங்கி ரூ.76 கோடிக்கு மேல் வரி வசூலித்துள்ளனர். ஆண்டு வசூலில் 6-ல் ஒரு பங்கு தொகை 12 நாட்களில் வசூலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது