தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு: திருமாவளவன் குற்றச்சாட்டு

தொல்.திருமாவளவன் | கோப்புப் படம்.
தொல்.திருமாவளவன் | கோப்புப் படம்.
Updated on
1 min read

மதுரை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''இலங்கை கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்கவேண்டும். தமிழக முதல்வரும் அழுத்தம் தரவேண்டும். கள்ளக்குறிச்சியில் ஊடகவியலாளர்களை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நீட் தேர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களுக்கு பாதிப்பிலை என பேசிய மத்திய அமைச்சர் ஒரு தலித் தலைவர் போல் இன்றி, பாஜக அமைச்சராக பேசியுள்ளார். தமிழகத்திலிருந்தும், பெரியார் - அம்பேத்கர் பார்வையில் இருந்தும் நீட் பாதிப்பை பார்க்க வேண்டும். நீட் குறித்த தமிழக அரசின் 2-வது மசோதா கிடப்பில் உள்ளதால் மாநில அதிகாரத்தை மத்திய அரசு உதாசீனப்படுத்துவதற்கு இதுவே சான்று.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி அகில இந்திய அரசியலில் பெரிய தாக்கம் ஏற்படுத்தும். சனாதன சக்திகளை விரட்டியடிக்க இப்பயணம் வழிவகுக்கும்.

பாஞ்சாங்குளம் பகுதியில் ஊர் கட்டுபாடுகளில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது ஆறுதல் என்றாலும், வரவேற்கிறோம். இவ்விவகாரத்தில் தனி நபர் மீது நடவடிக்கை வேறு, ஒரு சமூகத்தையே புறக்கணிப்பது என்பது வேறு. கடைகளின் பொருள், வேலை கொடுப்பதில்லை. உறவு வைத்துக் கொள்வதில்லை போன்ற ஒடுக்குமுறையை திணிப்பது ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய போக்கு. ஒவ்வொரு பிரச்சினையிலும் போராடியே வழக்கு போன்ற நடவடிக்கை என்ற உளவியலைக் கொண்டுள்ள தமிழக காவல் துறைக்கு அரசு வழிகாட்டவேண்டும்.

இந்து மனுதர்மத்தில் கூறியதை நானும், சுட்டிக் காட்டினேன். நானும், ஆ.ராசாவும் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரே கருத்தை பேசினோம். ஒட்டுமொத்த இந்துக்களின் பாதுகாவலர்கள் என்ற மாயையை பாஜகவினர் உருவாக்குகின்றனர். இவர்களை புரிந்துகொள்ள வட இந்தியர்களுக்கு சிக்கல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சியை தெளிவாக புரிந்துள்ளோம்'' என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in